Published : 12 Jan 2024 05:54 AM
Last Updated : 12 Jan 2024 05:54 AM

10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ஜனநாயகம், அரசியலமைப்பு பாதிப்பு: அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றச்சாட்டு

சென்னை: பாஜக ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் ஜனநாயகம், அரசியலமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வரும் 14-ம் தேதி இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம் தொடங்க உள்ளார். இந்நிலையில், அது தொடர்பான நூல் வெளியீட்டு நிகழ்ச்சி தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் கட்சியின் அகில இந்திய செயலாளர் மது கவுட் யாக் ஷி, தமிழக பொறுப்பாளர் (தகவல் தொடர்பு) பாவ்யா நரசிம்மமூர்த்தி ஆகியோர் பங்கேற்று நூலை வெளியிட்டனர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சி, நமது மக்களையும் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் கடுமையாகப் பாதித்துள்ளது. 2012-ம் ஆண்டு வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 1 கோடியாக இருந்தது. 2022-ல் 4 கோடியாக உயர்ந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குடும்பங்களின் சேமிப்பு குறைந்துள்ளது.

மோடி அரசு கொண்டு வந்த 3 கறுப்புச் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் ஓராண்டுக்கு மேல் தெருவில் நின்று போராடினர். இதில் 750 விவசாயிகள் உயிரிழந்தனர்.

2013-ம் ஆண்டிலிருந்து தலித்களுக்கு எதிரான குற்றங்கள் 46.11 சதவீதம், பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் 48.14 சதவீதம் அதிகரித்துள்ளன. பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிகளை பாஜக விடுதலை செய்கிறது. பிரிஜ்பூசன் ஷரன் சிங், செங்கார் உள்ளிட்ட பாலியல் குற்றம்சாட்டப்பட்டவர்களையும், குற்றவாளிகளையும் பாஜக பாதுகாக்கிறது.

மொத்தத்தில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மையினர் மற்றும் ஏழைகளுக்கு திட்டமிடப்பட்டு பாகுபாடு காட்டப்படுகிறது. அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகியவை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவது வழக்கமாகிவிட்டது. பாஜகவின் 10 ஆண்டுகாலம், அநீதி காலமாக அமைந்துவிட்டது.

எனவே, இதற்கெல்லாம் முடிவுகட்ட இந்திய ஒற்றுமை நீதி நடைபயணத்தை ராகுல் காந்தி தொடங்க இருக்கிறார். இதற்கு மக்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் ஆ.கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.சி அணி தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார், பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x