

சென்னை: தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண தொகையை உடனே வழங்க வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக எம்.பி.க்கள் குழுவினர் இன்று சந்திக்கவுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த டிச.3, 4-ம் தேதிகளில் மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. அதேபோல், டிச.17, 18-ம் தேதிகளில் அதிகன மழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் மிகக் கடுமையான பாதிப்புகளை சந்தித்தன.
சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் எற்பட்ட கடுமையான பாதிப்புகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரிய நிவாரணத் தொகையை வழங்குவதாக உறுதியளித்தார். அதேபோல், தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை மத்திய குழுவினரும் பார்வையிட்டு ஆய்வு செய்திருந்தனர்.
இந்த 2 இயற்கைப் பேரிடர் பாதிப்புகளுக்கு மறுகட்டமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரூ.19,692.67 கோடியும் மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு ரூ.18,214.52 கோடியும் என மொத்தம் ரூ.37,907.19 கோடி நிவாரணத் தொகை வழங்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியது. இதற்கிடையில், திருச்சியில் கடந்த 2-ம் தேதி நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திரமோடி, தமிழகத்தில் ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்புகள் தொடர்பாக குறிப்பிட்டு, சேதங்கள் குறித்த தனது வருத்தத்தையும், வேதனையையும் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், 2 பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் வகையில், தமிழக அரசு கோரியுள்ள ரூ.37,907.19 கோடி நிவாரண தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி தமிழகத்தை சேர்ந்த கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க கடந்த வாரம் நேரம் கேட்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, ஜனவரி 12-ம் தேதி (இன்று) பிற்பகலில் அமித்ஷாவை தமிழக எம்.பி.க்கள் குழு சந்தித்து, நிவாரணத் தொகையை விரைந்து வழங்குமாறு அமித்ஷாவிடம் வலியுறுத்தவுள்ளனர்.