Published : 12 Jan 2024 06:05 AM
Last Updated : 12 Jan 2024 06:05 AM
சென்னை: வெளி மாவட்ட பெண் காவலர்கள் தங்குவதற்காக, சென்னையில் புதுப்பிக்கப்பட்ட ஓய்வு இல்லத்தை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் திறந்து வைத்தார். வெளி மாவட்டங்களில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக சென்னை வரும் பெண் காவலர்கள் தங்குவதற்கு, சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வால்டாக்ஸ் சாலை, ஐசக் தெருவில் ‘பெண் காவலர்கள் ஓய்வு இல்லம்’ பயன்பாட்டில் இருந்தது.
அதை சீரமைத்து, கூடுதல் வசதிகளுடன் கூடிய ஓய்வு இல்லத்தை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார். வளாகத்தில் மரக்கன்றை நட்டு வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சீரமைத்து திறக்கப்பட்டுள்ள பெண் காவலர் ஓய்வு இல்லத்தில் 21 அறைகள் உள்ளன. ஓர் அறையில் இருவர் வீதம் 42 பேர் தங்கலாம். இதுதவிர, ஒரு பொது அறையில் 15 பேர் தங்கலாம். பணி நிமித்தமாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் பெண் காவலர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
சேவை கட்டணமாக ஒரு நாள் வாடகையாக ரூ.100 மட்டுமே வசூலிக்கப்படும். ஓய்வு இல்லத்தின் நுழைவுவாயில், வெளியேறும் பகுதி, நடைபாதையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்திய அளவில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை உள்ளது. ரோந்து பணிக்கு செல்லும் பெண் காவலர்கள் பாதுகாப்பான நிலையிலேயே உள்ளனர். எனவே, நீங்கள் (செய்தியாளர்கள்) கேட்பதுபோல அவர்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல அவசியம் இல்லை. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் பணியை இணை ஆணையர்கள், கூடுதல் ஆணையர்கள் திடீரென நேரில் சென்று கண்காணிக்க உள்ளனர்.
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பொதுமக்களும் கட்டுப்பாடுகளுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டும்.
மக்களவை தேர்தல் தொடர்பான பாதுகாப்பு பணிகளை காவல் துறை தொடங்கிவிட்டது. இதற்காக கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது. தேர்தலை முன்னிட்டு, காவலர்களுக்கான பணியிட மாறுதல் வரும் 31-ம் தேதியோடு முடிக்கப்பட்டுவிடும். இவ்வாறு சென்னை காவல் ஆணையர் கூறினார்.
நிகழ்ச்சியில், கூடுதல் காவல் ஆணையர் அஸ்ரா கார்க் (வடக்கு), இணை ஆணையர்கள் அபிஷேக் தீட்சித், தேவராணி (போக்குவரத்து), துணை ஆணையர் ஸ்ரேயா குப்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT