Published : 12 Jan 2024 06:20 AM
Last Updated : 12 Jan 2024 06:20 AM

2023-ம் ஆண்டின் சுத்தமான நகரம் தரவரிசை பட்டியல்: தமிழகத்தில் மறைமலை நகர் நகராட்சி முதலிடம்

செங்கல்பட்டு: பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு தூய்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பல திட்டங்களை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் தூய்மை பராமரிப்பில் சிறப்பாகச் செயல்படும் நகரங்களைக் கண்டறிந்து கவுரவப்படுத்தி ஊக்குவிக்கும் வகையில், `ஸ்வச் சர்வேக்ஷன்' என்ற தூய்மையான நகரங்களுக்கான விருது வழங்கும் திட்டத்தை 2016-ம் ஆண்டில் பிரதமர் அறிமுகம் செய்து வைத்தார்.

`ஸ்வச் பாரத் அபியான்' திட்டத்தின் ஒரு பகுதியாகத் தொடங்கப்பட்ட இதன்படி, தேசிய அளவில் தூய்மையில் சிறந்து விளங்கும் நகரங்கள் குறித்த தரவரிசை பட்டியலை பல்வேறு பிரிவுகளின் கீழ், ஒவ்வோர் ஆண்டும், மத்தியவீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், 2023-ம் ஆண்டுக்கான ஸ்வச் சர்வேக்ஷன் முடிவுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டார். அதன்படி தமிழகத்தின் தூய்மைநகரங்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 20 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 3 நகராட்சிகள், ஒரு மாநகராட்சி, 6 பேரூராட்சிகள் என 10 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இதில் மறைமலை நகர் நகராட்சி தரவரிசை பட்டியலில் முதல் இடமும், மதுராந்தகம் 57-வது இடமும், செங்கல்பட்டு 93-வது இடமும் பெற்றுள்ளன.

தாம்பரம் மாநகராட்சி 13-வது இடமும், பேரூராட்சிகளில் கருங்குழி 135-வது இடமும், திருப்போரூர் 208-வது இடமும், அச்சிறுபாக்கம் 308-வது இடமும், திருக்கழுக்குன்றம் 322-வது இடமும், மாமல்லபுரம் 369-வது இடமும், இடைக்கழிநாடு 540-வது இடமும் பிடித்துள்ளன.

மறைமலை நகர் நகராட்சி தமிழக அளவிலும் முதலிடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. குப்பையை கையாளுதல், பிளாஸ்டிக் கழிவுகளை நிர்வகித்தல், குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி செய்தல், தூய்மை பணியாளர்களின் பாதுகாப்புபோன்ற கொள்கைகளுக்கு முன்னுரிமை அளித்து, மேற்கண்ட தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x