Published : 12 Jan 2024 06:12 AM
Last Updated : 12 Jan 2024 06:12 AM
தேனி: தனிக்கட்சி தொடங்க மாட்டேன். அதிமுகவை மீட்டு தொண்டர்களின் கையில் கொடுப்பதே எனது இலக்கு, என்று தேனியில் நடந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தேனியில் ஓபிஎஸ் அணி சார்பில், தொண்டர்கள் உரிமை மீட்பு ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் பொன்னுப்பிள்ளை தலைமை வகித்தார்
. மாவட்டச் செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான் முன்னிலை வகித்தார். தேனி தொகுதி மக்களவை உறுப்பினர் ப.ரவீந்திரநாத், இணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ் பாண்டியன், கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி, முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசியதாவது: எத்தனை தீர்ப்பு வந்தாலும் நம்முடன் இலக்கை நோக்கி தொண்டர்கள் பயணித்து வருகிறார்கள். தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம்தான் இது. ஆனால் சர்வாதிகாரத்தோடு கட்சியை பழனிசாமி கைப்பற்றி இருக்கிறார்.
சர்வாதிகாரர்களின் முடிவு எப்படி இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும். பழனிசாமி பொறுப்பேற்றதிலிருந்து அதிமுக தோல்வியைத் தான் சந்தித்து வருகிறது. தொண்டர்கள் ஆதரவு இல்லாததே இதற்குக் காரணம். தனிக்கட்சி தொடங்கமாட்டேன். கட்சியை மீட்டு தொண்டர்களின் கையில் ஒப்படைப்பதே எனது இலக்கு. இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT