

வேலூர்: தமிழகம் முன்னேற வேண்டும் என்றால் உடனடியாகச் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். வேலூரில் பாமக சார்பில் சமூக நீதி காக்கச் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.
இதில், பாமக மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கிப் பேசும்போது, ‘‘தமிழ்நாட்டில் சாதி வாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்திட 44 ஆண்டுகளுக்கு முன்பே முதன்முதலில் குரல் கொடுத்தவர் ராமதாஸ். 1931-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் நடத்தப்பட்டதற்குப் பிறகு இந்த கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. உண்மையான சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும் என்றால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டியது அவசியமாகும்.
இந்தியாவில் இடஒதுக்கீடு என்பது மதம், மாநிலம், மொழி என வேறெந்த அடிப்படையிலும் இல்லாமல் சாதியின் அடிப்படையிலேயே அளிக்கப்பட்டு வருகிறது. இந்த இடஒதுக்கீடும் 1931-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு அடிப்படையில்தான் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், இத்தனை ஆண்டுகள் இடைவெளியில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சில சாதிகளில் மக்கள் தொகை அதிகரித்தும், சில சாதிகளில் ஒருநபர் கூட இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது. சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தினால்தான் மக்களின் உண்மையான நிலை என்ன என்பதை அறிந்திட முடியும். தமிழக முதல்வர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்குத் தயக்கம் காட்டி வருகிறார்.
தமிழகம் முன்னேற வேண்டும் என்றால் உடனடியாகச் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டும். இக்கோரிக்கையை பாமக அரசியலுக்காகக் கோரவில்லை. பின்தங்கிய சமூகங்களை விஞ்ஞான ரீதியில் முன்னேற்ற வேண்டும் என்றால் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது அவசியம் என்பதற்காகவே இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.
இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் தொடர்ந்து தயக்கம் காட்டினாலும் பல்வேறு கட்சிகளையும், மக்களையும் திரட்டி பெரும் போராட்டங்களும் முன்னெடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் 69 சதவீதம் இட ஒதுக்கீட்டை ஜெயலலிதா நிலை நாட்டினார். ஆனால், அதை அதிமுகவினரே பேச மறுத்து வருகின்றனர். சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக அதிமுகவினர் கூட பேசுவதில்லை. திமுகவுக்கு மனது இருந்தும் அதிகாரம் இல்லை என்று பொய் சொல்கிறார்கள்.
திமுக சமூக நீதி குறித்துப் பேசத் தகுதியில்லை. ஒடுக்கப்பட்ட மக்களை வாக்கு வங்கியாக அரசியல் கட்சியினர் பயன்படுத்துகின்றனர்.
திராவிடக் கட்சிகள் சாதியை வைத்து அரசியல் செய்கின்றனர்’’ என்றார். இந்தக் கூட்டத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சர்கள் ஆர்.வேலு, என்.டி.சண்முகம், பாமக மாவட்டச் செயலர் இளவழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.