

புதுச்சேரி: மெயிலில் பாலியல் துன்புறுத்தல் கடிதம் வந்தது தொடர்பாக புகார் தந்து 3 மாதங்களாகியும் நடவடிக்கை இல்லாததால் ஜிப்மர் குடியுரிமை மருத்துவர் பிரதமருக்கு புகார் அனுப்பியுள்ளார். அந்தப் புகார் மேல் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஆளுநர் தமிழிசை பதில் தந்துள்ளார்.
மத்திய அரசின் முக்கிய மருத்துவமனைகளில் ஒன்றான ஜிப்மர் புதுச்சேரியில் உள்ளது. இங்கு மருத்துவப் பட்டப்படிப்பு முடித்துவிட்டு முதுகலை பட்டப்படிப்புக்காக (எம்டி) மருந்தியல் துறையில் டாக்டர் ரோஷா சந்தேஷ் இருக்கிறார். அவர் பிரதமர் மோடி, துணைநிலை ஆளுநர் தமிழிசை, இந்திய மருத்துவ கவுன்சில், சுகாதாரத்துறை, தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு இணையத்தில் ஒரு புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதன் விவரம்: நான், டாக்டர் ரோஷா சந்தேஷ். எனக்கு புதுச்சேரி ஜிப்மர், மருந்தியல் துறையின் ஆசிரியர்களுக்கான மெயில் ஐடியிலிருந்து பாலியல் துன்புறுத்தல் கடிதம் கடந்த ஆண்டு செப்டம்பரில் வந்தது. அதில் ஒவ்வொரு வெள்ளியன்றும் நடைமுறை வகுப்புக்குப் பிறகு தன்னை தனியாக சந்திக்க வேண்டும். எம்டி இறுதி தேர்வில் முதல் முயற்சியில் தேர்ச்சி பெறவும், குடியுரிமை மருத்துவர் பதவிக்காலம் நிறைவு செய்யவும் பாலியல் இச்சைக்கு உடன்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு உடன்படாவிட்டால் இதர குடியுரிமை மருத்துவர்கள் முன்பு துன்புறுத்துவேன். எம்டி இறுதி தேர்வுகளில் வெல்ல அனுமதிக்க மாட்டேன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேபோல் மெயில் மற்றவருக்கும் வந்திருந்தது. இதுபற்றி ஜிப்மர் இயக்குநரிடம் புகார் தெரிவித்தேன். இது பெரிய விஷயமில்லை எனக் குறிப்பிட்டு புகாரை கூட வாங்க மறுத்துவிட்டார். பெண்களுக்கான உள்புகார் குழுவில் புகார் தந்தேன். அத்துடன் சைபர் கிரைமிலும் புகார் தந்தேன். மெயில் ஐபி முகவரி மூலம் கண்டறிய எங்களால் இயலவில்லை. புகார் தந்தும், இச்சம்பவம் நிகழ்ந்தும் மூன்று மாதங்களாகிவிட்டது. கடிதத்தை நன்கு எங்களை அறிந்தவர்தான் அனுப்பியிருக்க வேண்டும். அவர் யாரென்று அறிய இயலாமல் அவர் மத்தியில் நாங்கள் உள்ளோம். இதில் நடவடிக்கை தேவை. அதனால் பிரதமர், ஆளுநர் உள்ளிட்டோருக்கு புகார் கடிதம் இணையத்தில் எக்ஸ் தளத்தில் அனுப்பியுள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக மேல் விசாரணைக்கு அனுப்பபட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.