Published : 11 Jan 2024 05:34 AM
Last Updated : 11 Jan 2024 05:34 AM
சென்னை: நிலம், பணம், சொத்து தகராறு உட்பட சிவில் பிரச்சினைகளில் போலீஸார் தேவையில்லாமல் தலையிடக் கூடாது. மீறினால் சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
பணம், நிலம், சொத்து, பாதை, அறிவுசார் சொத்து தகராறு உள்ளிட்ட சிவில் பிரச்சினை தொடர்புடைய மனுக்கள் மீது சில காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிய வந்துள்ளது. எனவே, சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் விவகாரங்கள் தவிர, சிவில் பிரச்சினைகளில் போலீஸார் தேவையில்லாமல் தலையிடக் கூடாது.
மேலும் எப்.ஐ.ஆர். சி.எஸ்.ஆர். அல்லது உயர் அதிகாரிகள் மற்றும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் இல்லாமல் எந்தவொரு மனுக்கள் மீதும் போலீஸாரால் எந்த விசாரணையும் இருக்கக் கூடாது. சிவில் விவகாரங்களில் விசாரணை அல்லது தலையிடுவதை காவல் துறை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் காரணமாக, சிவில் விவகாரங்களில் விசாரணை நடத்துவது அல்லது தலையிடுவது முற்றிலும் அவசியம் என்று காவல் துறை அதிகாரி கருதினால், சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மாவட்டங்களில் உள்ள காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் நகரங்களில் உள்ள காவல் ஆணையர்களிடம் அனுமதி பெற வேண்டும்.
மேலும் எஸ்பி, காவல் ஆணையரின் தனிப்பட்ட ஒப்புதல் இல்லாமல், எந்தவொரு காவல் துறை அதிகாரியும் சிவில் விவகாரங்கள் மீதான மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அவர்கள் மீது சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சுற்றறிக்கையை அனைத்து பிரிவு போலீஸாரும் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு கூடுதல் டிஜிபி அருண் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT