Published : 11 Jan 2024 05:38 AM
Last Updated : 11 Jan 2024 05:38 AM

முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தில் கடந்த ஆண்டு 10 லட்சம் பேர் பயன்: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

சென்னை: முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கடந்த ஆண்டில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை தேனாம்பேட்டை, தமிழ்நாடு சுகாதார திட்ட அலுவலகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் 2024-25-ம் ஆண்டுக்கான காப்பீட்டுதொகை ரூ.1,228.27 கோடிக்கான காசோலையை யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வழங்கினார்.

சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் கோவிந்தராவ், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் சண்முககனி, யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர் சத்யஜித் திருப்பாதி, பொது மேலாளர் உஷாகிரிஷ், துணை பொது மேலாளர் பிரேமா முகிலன், தலைமை மேலாளர் தேவராஜ், இணை இயக்குநர் ரவிபாபு ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர், அமைச்சர் பேசியது: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்துக்கு நாளை (ஜன.11) முதல் 2025-ம் ஆண்டு ஜன.10-ம் தேதி வரையிலான பிரீமியத் தொகை ரூ.1,228.27 கோடிக்கான காசோலை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சிக்காலத்தில் ரூ.2 லட்சமாக இருந்த காப்பீட்டுத் தொகை 5 லட்சமாகவும், ரூ.72,000 இருந்த ஆண்டு வருமானம் ரூ.1,20,000 ஆகவும், 1,450 ஆக இருந்த சிகிச்சை முறைகள் 1,513 ஆகவும் தற்போது உயர்ந்துள்ளது. இத்திட்டம் 854 அரசு மருத்துவமனைகள், 975 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 1,829 மருத்துவமனைகளில் செயல்படுகிறது. இக்காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சில சிகிச்சைகளுக்கு ரூ.22 லட்சம் வரை பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர். 8,84,551 புதிய குடும்பங்கள் இக்காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இத்திட்டம் 50 சதவீதம் அரசு மருத்துவமனைகளில் செயல்படுவதை பாராட்டி தமிழகத்துக்கு சமீபத்தில் மத்திய அரசு விருது வழங்கியது. 2022-ம் ஆண்டு ஜன.11-ம் தேதி முதல் இன்று (நேற்று) வரை ரூ.1,329.31 கோடி காப்பீட்டுத் தொகையில் 10,12,030 பேர் பயனடைந்துள்ளனர்.

அதேபோல், இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48 திட்டம் கடந்த 2021 டிச.18-ம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் இதுவரை 2,09,039 பேர் பயன்பெற்றுள்ளனர். இத்திட்டத்துக்காக இதுவரை ரூ.182.09 கோடி செலவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x