

சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளது. வரும் 13-ம் தேதி முதல் வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை தென் மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் என தனித்தனியே அதிகனமழையாக கொட்டித் தீர்த்தது. இதுவரை இல்லாத அளவுக்கு காயல்பட்டினத்தில் 95 செ.மீ. மழை பதிவானது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இந்த அளவுக்கு மழையைக் கொடுத்து, வானிலை வரலாற்றில் புதிய அத்தியாயத்தை தொடங்கிவைத்துள்ளது.
அதேபோல, புயல் கரையைக் கடக்காமல் கடலிலேயே நிலவினால், கட்டுமானங்கள் நிறைந்திருக்கும் மாநகரத்தில் எந்த அளவுக்கு பாதிப்புகள் ஏற்படும் என்று மிக்ஜாம் புயல் மூலமாக வடகிழக்குப் பருவமழை கற்பித்துள்ளது. இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை முடிவுக்கு வருகிறது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: கேரள கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இவற்றால் இன்றும், நாளையும் (ஜன. 11, 12) தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். தொடர்ந்து 5 நாட்கள் தமிழகத்தில் எங்கும் மழை பதிவாகவில்லை என்றால், பருவமழை விலகியதாக அறிவிக்கப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.
ஜன. 10-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் 12 செ.மீ., திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 11 செ.மீ., திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் 10 செ.மீ., திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் 9 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, ஊத்து ஆகிய இடங்களில் 8 செ.மீ., ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சி ஆகிய இடங்களில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார்வளைகுடா, குமரிக்கடல், மாலத்தீவு பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், தெற்கு கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் இன்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.