Published : 11 Jan 2024 06:05 AM
Last Updated : 11 Jan 2024 06:05 AM

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள்: ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலர் ஆய்வு

சென்னை: சென்னையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் இடங்களை தமிழகஅரசு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஆறாவது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி ஜன.19-ம் தேதி முதல் ஜன. 31-ம்தேதி வரை தமிழகத்தில் சென்னை,கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடைபெற உள்ளது.

இந்த விளையாட்டு போட்டியில், நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் 6,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தபோட்டியை சிறப்பாக நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளை தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செய்து வருகிறது.

இதன் ஒருகட்டமாக, சென்னையில் போட்டி நடைபெற உள்ள விளையாட்டு மைதானங்கள் மறுசீரமைக்கப்படுகின்றன. தொடக்கவிழா நடைபெறும் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்க மைதானத்தில் செயற்கை ஓடுதள பாதை அமைக்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களை அரசு தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா நேற்று ஆய்வு செய்தார். ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், மேயர்ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கம், எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம், நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டரங்கம், வேளச்சேரி நீச்சல்குள வளாகம் மற்றும் வேளச்சேரி, குருநானக்கல்லூரி ஆகிய இடங்களில் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

குருநானக் கல்லூரியில் உள்ள துப்பாக்கி சுடும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 50 மீட்டர், 25 மீட்டர் மற்றும் 10 மீட்டர் பாதைகளை தலைமைச் செயலாளர் பார்வையிட்டார். அப்போது அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டறிந்தார். வீரர் வீராங்கனைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்க அறிவுறுத்தினார்.

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் வேளச்சேரி நீச்சல்குள வளாகத்தை ஆய்வு செய்தபோது, அங்கு வீரர், வீராங்கனைகள் உடை மாற்றும் அறையை பார்வையிட்டார். இதன் பின்னர் இதே வளாகத்தில் உள்ள ஜிம்னாஸ்டிக் மையத்தை ஆய்வு செய்த அவர், போட்டி நடைபெறும் பகுதியில் காற்றோட்ட வசதி இருக்குமாறு அறிவுறுத்தினார்.

இதையடுத்து, சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் சீரமைப்புபணிகளை அவர் பார்வையிட்டார். தொடக்க விழா நடைபெறும் பகுதியை அவர் ஆய்வு செய்தார்.பின்னர் அங்கு அமைக்கப்படும் கேலோ இந்தியா தலைமை அலுவலகத்தையும் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, பெருநகர சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x