Published : 11 Jan 2024 06:20 AM
Last Updated : 11 Jan 2024 06:20 AM
சென்னை: ஆந்திர மாநிலத்தில் மாயமான 19 வயது இளம் பெண்ணை சென்னை போலீஸார் மீட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே கடந்த ஆண்டு செப். 5-ம் தேதி ஆதரவின்றி 19 வயதுடைய இளம் பெண் ஒருவர் தவித்துக் கொண்டிருந்தார். தகவல் அறிந்து சென்னை காவல் துறையின் `காவல் கரங்கள்' பிரிவு போலீஸார் தன்னார்வலர்கள் உதவியுடன் பாதுகாப்பாக அப்பெண்ணைமீட்டு காப்பகத்தில் தங்கவைத்துப் பராமரித்தனர்.
பின்னர், அவரிடம் விசாரிக்கப்பட்டபோது அவர் பெயர் நந்தினி என்பதும், அவர் ஆந்திரமாநிலம், சித்தூர் மாவட்டம், குப்பம் மாடல்காலனியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அப்பெண் அவரது தாய் மாமா வினய் என்பவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வந்ததும், கடந்த செப். 1-ம் தேதி அவரது பாட்டியிடம் சண்டை போட்டுவிட்டு யாரிடம் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் போலீஸார் மேலும் விசாரணை செய்ததில் பெண்ணின் தந்தை முருகேஸ் என்பவர் நந்தினி காணாமல் போனது குறித்து ஆந்திர மாநிலம், குப்பம் நகரக் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
அதன்பேரில் காவல் கரங்கள் குழுவினர் ஆந்திர மாநிலம், குப்பம் நகரக் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து, மீட்கப்பட்ட நளினியின் தந்தை, தாய், கணவர் மற்றும் குப்பம் நகரக் காவல் நிலைய காவலர்களைச் சென்னைக்கு வரவழைத்து நேற்று முன்தினம் ஒப்படைத்தனர்.
இளம் பெண்ணை பத்திரமாக ஒப்படைத்த சென்னை பெருநகர காவல் கரங்கள் குழுவினர் மற்றும் தன்னார்வலர்களை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT