

சென்னை: சென்னை மாநகராட்சி 51-வது வார்டு திமுக கவுன்சிலர் நிரஞ்சனா, அக்கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், 51-வது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பவர் நிரஞ்சனா. அவரது கணவர் ஜெகதீசன். இவரும் திமுக நிர்வாகியாக உள்ளார்.
இவர் கடந்த ஆண்டு போலீஸாரை தகாத வார்த்தைகளால் பேசி, போலீஸாருக்கு மிரட்டல் விடுத்த வீடியோசமூக வலைதளத்தில் வைரலானது. அதனைத் தொடர்ந்து அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரது மனைவியான திமுக கவுன்சிலர் நிரஞ்சனா, கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதாகவும் கூறி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.