மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு: பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு: பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்
Updated on
1 min read

மயிலாடுதுறை: தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம், ஆச்சாள்புரம், மாதானம் உட்பட பல்வேறு கிராமங்களில் அண்மையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களில் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்த பி.ஆர்.பாண்டியன், பின்னர் மாதானம் கிராமத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: காவிரி டெல்டாவில் பெருமழை காரணமாக, அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் அழிந்துள்ளன. குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்டவிவசாயிகள் மேட்டூர் அணை தண்ணீர் கிடைக்காததால் தொடக்கம் முதலே பல்வேறு இழப்புகளை சந்தித்துள்ளனர். பல இடங்களில் காய்ந்து விளைச்சல் இல்லாத நிலை உள்ளது. ஒரு லட்சம் ஏக்கரில் பயிர்கள் முழுமையாக அழிந்துவிட்டன.

காவிரி டெல்டா மாவட்டங்களில் மட்டும் 8 லட்சம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த மற்றும் கதிர்வரும் நிலையில் இருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோல, தமிழகம் முழுவதும் பெரும் பயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்கள் குறித்து கணக்கெடுத்து, ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும். மேலும், மத்திய, மாநில அரசுகளுடைய பங்குத்தொகையை பெற்றுக்கொள்ளும் பயிர்க் காப்பீட்டு நிறுவனங்கள், பயனாளிகளின் பட்டியலை அரசுக்கு வழங்குகிறதே தவிர, அதற்கான இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் முழுமையாக வரவு வைக்காமல் ஆண்டுதோறும் ஏமாற்றி வருகின்றன.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் காப்பீட்டுக்கான இழப்பீட்டை, தமிழக அரசே முழு பொறுப்பேற்று பெற்றுக்கொடுக்கும் நிலை இருந்தது. ஆனால், தற்போதைய திமுகஆட்சிக் காலத்தில் காப்பீட்டு நிறுவனங்கள் தங்களின் விருப்பத்துக்கு செயல்படும் நிலை உள்ளது. எனவே, பயிர்க் காப்பீடு இழப்பீடு விவசாயிகளுக்கு முழுமையாக சென்றடைவதை தமிழக முதல்வர் கண்காணிக்க வேண்டும். மேலும், பயிர்க் காப்பீடு இழப்பீடு, இடுபொருள் நிவாரணம் பெறும் பயனாளிகளின் பட்டியலை வெளிப்படையாக வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, மாநில துணைச் செயலாளர் செந்தில் குமார், கடலூர் மாவட்டச் செயலாளர் மணிக்கொல்லை ராமச் சந்திரன், மயிலாடுதுறை மாவட்ட கவுரவத் தலைவர் சிவப்பிரகாசம், துணைச் செயலாளர் கொள்ளிடம் பன்னீர்செல்வம், அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in