Published : 11 Jan 2024 04:08 AM
Last Updated : 11 Jan 2024 04:08 AM
மதுரை: அரசு பேருந்து வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்க எவ்வாறு அனுமதி வழங்கப்படுகிறது? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நாகர்கோவிலைச் சேர்ந்த ஜான் விக்டர் தாஸ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் பகுதிகளில் குறிப்பிட்ட வழித்தடங்களில் மினி பேருந்து இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஒதுக்கப்பட்ட வழித் தடங்களுக்கு பதிலாக அரசு பேருந்துகள் இயக்கப்படும் வழித் தடத்திலேயே மினி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் அரசு போக்கு வரத்து கழகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
அரசு பேருந்துகளுக்கான வழித்தடத்தில் மினி பேருந்துகளை இயக்குவதால் புறநகர் பகுதி மக்கள் போதுமான பேருந்து வசதியில்லாமல் அவதிப் படுகின்றனர். மேலும் மினி பேருந்துகளில் குறிப்பிட்ட அளவு பயணிகளை மட்டுமே ஏற்ற வேண்டும். ஆனால், அதைவிட அதிகளவில் பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். எனவே, அனுமதி வழங்கப்பட்டுள்ள வழித்தடத்தில் மட்டுமே மினி பேருந்துகளை இயக்கவும், இதை மீறும் மினி பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், அரசு போக்குவரத்து பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்கினால் அரசுக்கு இழப்பு ஏற்படும். தற்போது அரசு போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. எந்த விதியின் அடிப்படையில் அனுமதி பெறாத வழித்தடத்தில் மினி பேருந்துகள் இயக்க அனுமதிக்கப் படுகிறது? மனுதாரர் தரப்பில் மினி பேருந்துகள் விதி மீறல் தொடர்பாக கூடுதல் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை தள்ளிவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT