

வேலூர் / திருவண்ணாமலை: போக்குவரத்துக்கழக தொழிற் சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை வரும் 19-ம் தேதி நடைபெறும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதன் இரண்டாம் நாளான நேற்று வேலூர் மாவட்டத்தில் 95 சதவீதம் அளவுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதற்கிடையில், வேலூர் மாவட்டத்தில் பேருந்து சேவைகள் குறித்து தமிழக போக்கு வரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவ சங்கர், வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘‘தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். சென்னை உயர் நீதிமன்ற அறிவுறுத்தலை அடுத்து வேலை நிறுத்தத்தைக் கைவிடுவதாக போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், வியாழக்கிழமையே பணிக்குத் திரும்புவதாகவும், தொழிற்சங்கங்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், போக்குவரத்துத் தொழிற் சங்கங்கள் கோரிக்கைகள் தொடர் பாக முதல்வருடன் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஜன.19-ம் தேதி மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அதன்பிறகு நல்ல முடிவு எடுக்கப்படும்.
போக்குவரத்து தொழிலாளர்கள் வைத்திருந்த 6 கோரிக்கைகளில் இரண்டு ஏற்கெனவே நிறைவேற்றப் பட்டுவிட்டன. கருணை அடிப்படையில் 800-க்கும் மேற்பட்டோருக்கு போக்குவரத்துக் கழகங்களில் பணி வழங்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களின் மற்றொரு கோரிக்கை யான புதிதாக ஓட்டுநர், நடத்துநர்களை பணிக்கு எடுக்க வேண்டும் என்பதும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
நிலுவையில் உள்ள இரண்டு கோரிக்கைகளும் நிதிநிலை சார்ந்ததாகும். அரசுக்கு இருக்கும் நிதி நெருக்கடியில் இப்போது அது சாத்தியமில்லை என்பதுதான் எங்களது கருத்து. இல்லவே இல்லை என்று கூறவில்லை. நிதிநிலை சரியான பிறகு கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என கூறியுள்ளோம். முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு பின்பு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். அப்போது, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பேரணாம்பட்டு பணிமனையில் இருந்து தற்காலிக ஓட்டுநர் மூலம் வேலூருக்கு நேற்று அரசுப் பேருந்து இயக்கப்பட்டது. இந்த பேருந்து குடியாத்தம் நெல்லூர் பேட்டை பகுதியில் சென்ற போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தின் முன்பகுதி யில் அமர்ந்திருந்த 8 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது தொடர்பாக குடியாத்தம் நகர காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
அதேபோல், குடியாத்தத்தில் இருந்து சென்னை நோக்கி நேற்று அதிகாலை புறப்பட்ட அரசுப் பேருந்து 4.30 மணியளவில் கே.வி.குப்பம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்துவிட்டு தப்பினர். இது தொடர்பாக கே.வி.குப்பம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 95 சதவீதம் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், செய்யாறு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பாக அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு,பாட்டாளி, ஏ.ஐ.டி.யு.சி உள் ளிட்ட தொழிற்சங்கங்களின் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்க மிட்டனர். இதனால், பணிமனையில் இருந்து சிறிது நேரம் பேருந்துகள் வெளியே செல்வது நிறுத்தி வைக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கலைந்து சென்ற பிறகே பேருந்துகள் இயக்கப்பட்டன.