

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். 2,19,71,113 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை, முழுக்கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கும் திட்டம் மற்றும் 1 கோடியே 77 இலட்சம் இலவச வேட்டிகள், 1 கோடியே 77 இலட்சம் இலவச சேலைகள் வழங்கும் திட்டம் தமிழக அரசால் சில தினங்கள் முன் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை ஆழ்வார்பேட்டை டி.யூ.சி.எஸ் நியாய விலைக் கடையில் இந்த திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதனிடையே, தமிழக அரசின் நிவாரண உதவி, பொங்கல் பரிசுத் தொகுப்பு உள்ளிட்ட சலுகைகளில் குறைவான மாத ஊதியம் பெறும் சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். அரிசி அட்டை வைத்திருக்கும் லட்சங்களில் மாத சம்பளம் பெறும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் வருமானவரி செலுத்துபவர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. ஆனால், தனியார் நிறுவனங்களில் குறைவான மாத ஊதியம் பெறும் சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்களுக்கு பல ஆண்டுகளாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவதில்லை.
சமீபத்தில் மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தால் உண்மையாகவே பாதிக்கப்பட்டிருந்தும், சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்கள் என்ற ஒரே காரணத்தால், அவர்களுக்கு அரசின் நிவாரணத் தொகை ரூ.6 ஆயிரம் மறுக்கப்பட்டது. அதேவேளையில், அரிசி அட்டை வைத்திருந்த வருமானவரி செலுத்துபவர்களுக்கு அரசின் நிவாரண உதவி ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டது. அவர்கள் உண்மையாகவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டார்களா, இல்லையா என்பதைகூட சரிபார்க்கவில்லை. அரிசி அட்டை மட்டுமே தகுதியாக பார்க்கப்பட்டது.
குறைவான மாத ஊதியம் பெறுபவர்கள் சர்க்கரை அட்டை வைத்திருந்தால் பொங்கல் பரிசுத் தொகுப்பு, நிவாரண தொகை எதுவும் கிடையாது. அதுவே, வசதி படைத்தவர்களாக இருந்து அரிசி அட்டை வைத்திருந்தால் அனைத்து சலுகைகளும் கிடைக்கும் என்பதை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்களுக்கு அரசின் சலுகைகள் மறுக்கப்படுவது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, “அரிசி அட்டைதாரர்கள் முன்னுரிமை அடிப்படையில் பார்க்கப்படுகின்றனர். ஏழை மக்களுக்கு அரசின் அனைத்து சலுகைகளும் சென்று சேர வேண்டும் என்பதற்காகத்தான் அரிசி அட்டை வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்களுக்கு பல ஆண்டுகளாக எதுவும் வழங்கப்படுவதில்லை. அதனால்தான் சர்க்கரை அட்டையை, அரிசி அட்டையாக மாற்றிக் கொள்வதற்கு கால அவகாசங்கள் வழங்கப்பட்டன. அதனை பயன்படுத்தி லட்சக்கணக்கான சர்க்கரை அட்டைதாரர்கள் அரிசி அட்டைதாரர்களாக மாறிவிட்டனர். தற்போதைய நிலையில் சுமார் 6 லட்சம் சர்க்கரை அட்டைகள் மட்டுமே உள்ளது. சர்க்கரை அட்டைதாரர்களிடம் இருந்து வரும் கோரிக்கையின் அடிப்படையில் அவர்களை அரிசி அட்டைதாரர்களாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.