

குன்னூர்: உதகை மலைப்பாதையில் குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே மீண்டும் மண் சரிவு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலை துறையினர், மண் சரிவை அகற்றியும், மரங்களை வெட்டியும் சீரமைத்து வருகின்றனர்.
உதகை மலைப்பாதையில் குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே நந்தகோபால் பாலம் பகுதியில் விழுந்துகிடக்கும் பாறைகள்.இந்நிலையில், குன்னூர் - மேட்டுப் பாளையம் இடையே நந்த கோபால் பாலம் அருகே ஏற்கெனவே மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் மீண்டும் பாறைகள் மற்றும் மண் சரிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பொக்லைன் இயந்திரம் மூலமாக மரங்கள், பாறைகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர். மீண்டும் மழை பெய்தால் மண்சரிவு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. இதனால், மலைப்பாதையில் வாகனங்கள் இயக்கும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். மேலும், கடும் பனிமூட்டம் நிலவுவதால், முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகனங்களை இயக்கிவருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி, குன்னூரில் அதிகபட்சமாக 41 மில்லி மீட்டர் மழை பதிவானது. பர்லியாறு - 33, கிண்ணக்கொரை - 27, கோடநாடு - 23, கேத்தி - 21, கோத்தகிரி - 21, கீழ் கோத்தகிரி - 20, பாலகொலா - 20, குந்தா - 19, அவலாஞ்சி - 11, எமரால்டு - 11, கெத்தை - 10, உதகை - 5, அப்பர் பவானியில் 2 மில்லி மீட்டர் மழை பதிவானது.