முதலீட்டாளர் மாநாட்டில் தென் மாவட்டங்கள் புறக்கணிப்பு? - தாமாக முன்வந்து விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு: பொதுநல மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் அறிவுரை

முதலீட்டாளர் மாநாட்டில் தென் மாவட்டங்கள் புறக்கணிப்பு? - தாமாக முன்வந்து விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு: பொதுநல மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் அறிவுரை
Updated on
1 min read

மதுரை: சென்னையில் நடைபெற்ற உலகமுதலீட்டாளர் மாநாட்டில் தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டதாகப் புகார் தெரிவித்து, இது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மதுரை சட்டப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் வழக்கறிஞர் முனியசாமி, உயர் நீதிமன்றக் கிளையின் முதல் அமர்வில் ஆஜராகினார்.

அவர், "சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில், தென் மாவட்டங்களான மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் தொழில் தொடங்க எந்த நிறுவனங்களும் முன்வரவில்லை. இது தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி, உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

மேலும் அவர், “தென் மாவட்டங்களில் எந்த தொழிற்சாலையும் இல்லை. இதனால் இந்த மாவட்டங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கின்றனர்.

இந்நிலையில், சென்னையில் கடந்த 2 நாளாக நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் தமிழகத்தில் சுமார் ரூ.6.64 லட்சம் கோடி முதலீடு செய்ய பன்னாட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இந்த நிறுவனங்கள் தொழில் தொடங்க தென் மாவட்டங்களைத் தேர்வு செய்யவில்லை. இது தென் மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது” என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் ஆகியோர், “இதுபோன்ற விவகாரங்களை எப்படி நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்க முடியும். மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாக பொதுநல மனு தாக்கல் செய்தால் விசாரிக்கலாம்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in