

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஐ.டி. நிறுவன ஊழியரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
சென்னை கொரட்டூர் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் வென்சி. இவரது கணவர் புஷ்பராஜ், 7 மாதத்துக்கு முன்பு இறந்துவிட்டார். மகன் கிருஷ்டோ சுகந்த் (26), சேத்துப்பட்டில் உள்ள ஐடி நிறு வனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 15-ம் தேதி பைக்கில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அண்ணா சாலையில் சென்றபோது பைக் மீது கார் மோதியது. நிலைதடுமாறி கீழே விழுந்த கிருஷ்டோ சுகந்தின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
ராயப்பேட்டை மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட அவர், பின்னர் மேல்சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், கிருஷ்டோ சுகந்த் சனிக்கிழமை நள்ளிரவு மூளைச்சாவு அடைந்ததை டாக்டர்கள் உறுதி செய்தனர். இந்தத் தகவலை அவரது தாயாரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர்.
மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய வென்சி விருப்பம் தெரிவித்தார். அதன்படி, கிருஷ் டோவின் உடலில் இருந்து சிறு நீரகங்கள், கல்லீரல், இதயம், நுரையீரல் மற்றும் கண்களை டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை செய்து எடுத்தனர்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவருக்கு பொருத்துவதற்காக இதயம் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
கோவைக்கு...
கோவை மருத்துவமனைக்கு சிறுநீரகங்கள் அனுப்பப்பட்டன. எழும்பூர் அரசு கண் மருத்துவ மனையில் இருந்து வந்த டாக்டர்கள் குழுவினர், கண்களை பெற்றுச் சென்றனர். கல்லீரல் மற்றும் நுரையீரல் தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.