வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக புகார்: தனியார் நிறுவனத்தில் வருமானவரி சோதனை

வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக புகார்: தனியார் நிறுவனத்தில் வருமானவரி சோதனை

Published on

சென்னை: தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சென்னையில் கிளை அலுவலகங்கள் உள்ளன. இந்நிறுவனம் தொடர்புடைய தொழில் அதிபர் ஒருவருக்கு சொந்தமான தனியார் நிறுவனமும் சென்னையில் உள்ளது. இந்த நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து தொழிற்சாலைகள், மருத்துவமனைகளுக்கு காஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகிறது.

இந்த நிறுவனங்கள் வருமானத்தை குறைத்து காட்டி வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாககுற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இந்தநிறுவனம் தொடர்புடைய அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் உரிமையாளர்கள் வீடுகளில் நேற்று காலை முதல் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.

குறிப்பாக தி.நகர், திருப்போரூரை அடுத்துள்ள தண்டலம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளிலும் சோதனை நடைபெற்றது. சோதனையின்போது பிற நபர்களால் இடையூறு, அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் மத்திய தொழில் பாதுகாப்புபடை வீரர்கள் பாதுகாப்புடன் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. தி.நகர், தேனாம்பேட்டை, மந்தைவெளி, மயிலாப்பூர், செம்மஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in