

பழநி: பழநி, கொடைக்கானலில் நேற்று நாள் முழுவதும் பெய்த மழையால், சாலையெங்கும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பழநி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை 7 மணி முதல் மாலை வரை தொடர்ந்து கனமழையும், மிதமான மழையும் மாறி மாறி பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி, பழநியில் 93 மி.மீ. மழை பதிவானது. மழை காரணமாக, பழநி மலைக் கோயில் செல்லும் ரோப் கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மழை குறைந்த பின் மீண்டும் இயக்கப்பட்டது. தொடர் மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
பழநியில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. கொடைக்கானல் மலையடிவாரத்தில் வரதமாநதி, பாலாறு - பொருந்தலாறு, குதிரையாறு அணைகள் மற்றும் சண்முக நதியில் நீர்வரத்து அதிகரித்தது. இதில் பழநி பாலாறு - பொருந்தலாறு அணையின் நீர்மட்டம் 64.24 அடியாக ( மொத்தம் 65 அடி ) உயர்ந்துள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், அணைக்கு விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதே சமயம், அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
எனவே, பாலாறு - பொருந்தலாறு மற்றும் சண்முக நதி ஆற்றங்கரையோரப் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், கொடைக்கானல் நகர், மேல்மலை மற்றும் கீழ்மலைக் கிராமங்களிலும் நேற்று காலை முதலே தொடர் மழை பெய்தது. நேற்று பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி, கொடைக்கானல் ரோஜா பூங்கா பகுதியில் 26.5 மி.மீ., பிரையன்ட் பூங்கா பகுதியில் 28.4 மி.மீ. மழை அளவு பதிவானது. இதனால் கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் நீர்வரத்து அதிகரித்து உபரிநீர் மறுகால் பாய்ந்தது.
வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி, தேவதை அருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. கொடைக்கானலில் நேற்று பகலில் பனிமூட்டமும், கடும் குளிரும் நிலவியது. சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றன. மழை காரணமாக மலைக் கிராமங்களில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டது. பழநி, கொடைக்கானலில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காததால், மாணவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் நாள் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது.