சாலைக்கிராமம் பகுதியில் மழை - 1,000 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி சேதம்
இளையான்குடி: சாலைக் கிராமம் பகுதியில் கன மழையால் 1,000 ஏக்கருக்கு மேல் நெற்பயிர் நீரில் மூழ்கி சேதமடைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் சாலைக் கிராமம், வடக்கு சாலைக் கிராமம், சமுத்திரம், வலசைக்காடு, முத்துராமலிங்கபுரம், அய்யம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2,000 ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்பட்டது. இன்னும் ஓரிரு வாரங்களில் அறுவடைக்கு நெற்பயிர் தயாராக இருந்தது. இந்நிலையில், அப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் 1,000 ஏக்கர் நெற்பயிர் சாய்ந்தும், தண்ணீரில் மிதந்தும் சேதமடைந்துள்ளன.
விளை நிலங்கள் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து வடியாததால், பயிர் அழுகும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர். இது குறித்து சாலைக் கிராமம் விவசாயி முருகேசன் கூறுகையில், ஏக்கருக்கு ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை செலவழித்தோம். அறுவடை செய்யும் நிலையில் மழையால் பயிர்கள் சாய்ந்துவிட்டன.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீரும் வடியாமல் உள்ளது. இதனால் நெற்பயிர் மீண்டும் முளைத்துவிடும். இனி அறுவடை செய்வது மிகவும் சிரமம். இதனால் எங்களுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறினார். இது குறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகள் கூறுகையில், பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது என்றனர்.
