

ராமேசுவரம்: வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்ததால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் திங்கட்கிழமை வரையில் மிதமான மழையும், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இடை விடாமல் தொடர்ந்து பெய்த பலத்த மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
ராமேசுவரத்தில் காந்திநகர், அண்ணா நகர், இந்திரா நகர், அம்பேத்கர் நகர், மீனவர் குடியிருப்புகளான ராமகிருஷ்ணபுரம், நடராஜபுரம், மாந்தோப்பு, பாம்பன் தெற்கு வாடி தோப்புக் காடு, தங்கச்சிமடம் தேசிய நெடுஞ்சாலை, விக்டோரியா நகர் ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கிநின்றது. காலையிலேயே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் மிகுந்த அவதிப்பட்டனர்.
உணவு இடைவேளைக்கு பின்னரே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் ராமேசுவரத்தில் 34.90 மி.மீ, தங்கச்சிமடத்தில் 21.20 மி.மீ மழை பதிவானது.