Published : 10 Jan 2024 04:00 AM
Last Updated : 10 Jan 2024 04:00 AM
ஆண்டிபட்டி: தேனி மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால், வைகை அணையிலிருந்து அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 5 மாவட்ட கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி நீர்வளத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் கடந்த நவம்பர் இறுதி வாரத்தில் 70.5 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து, பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களுக்காக நீர் திறக்கப்பட்டது. இருப்பினும் நீர்வரத்து சீராக இருந்ததால் நீர்மட்டம் பெரியளவில் குறையவில்லை. கடந்த 6-ம் தேதி அணை 71 அடியை எட்டியது. உடனே அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டது.
நேற்று காலை விநாடிக்கு 1,928 கன அடியாக இருந்த நீர் வெளியேற்றம், காலை 8 மணிக்கு 2,563 கன அடியாகவும், 10 மணிக்கு 5,148 கன அடியாகவும் அதிகரிக்கப்பட்டது. பெரிய மற்றும் சிறிய மதகுகளின் வழியே சீறிப்பாய்ந்த நீர் பூங்காவின் தரைப்பாலத்தை மூடியபடி சென்றது. பின்னர், இந்த நீர் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, மாலை 6 மணிக்கு 2,755 கன அடியாக வெளியேற்றப்பட்டது.
நேற்றைய நிலவரப்படி, நீர்மட்டம் 71 அடியாகவும், நீர்வரத்து 2,233 கன அடியாகவும் இருந்தது. நீர்வளத் துறை அதிகாரிகள் கூறுகையில், தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், சின்னமனூர், வருசநாடு பகுதியில் மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆகையால் வரும் நீர் அப்படியே உபரியாகத் திறக்கப்படும். எனவே, 5 மாவட்டங்களின் கரையோர மக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம். பாதுகாப்பாக இருக்கவும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT