

கட்சித் தலைமையிடம் குறைகள் இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்கள் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
காரைக்குடியில் திமுக கட்சி நிர்வாகிகளுடனான நேர்காணல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இளைஞரணி, மாணவரணி, தொண்டரணி, மகளிரணி, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளின் கருத்துகளை தனித்தனியாக அவர் கேட்டறிந்தார்.
அப்போது, கட்சியின் வளர்ச்சி குறித்து நிர்வாகிகளிடன் கருத்துகளைக் கேட்டார். மக்களவைத் தேர்தலில் கட்சி தோல்விக்கு காரணம் என்ன. கடைசிவரை காங்கிரஸுடன் கூட்டணி இருந்துவிட்டு கடைசியில் தனியாகப் பிரிந்து நின்றதால் பாதிப்பா, பாஜக போல் பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமல் தேர்தலைச் சந்தித்தது காரணமா என நிர்வாகிகளுடன் ஆலோசித்தார்.
மேலும், மாவட்ட நிர்வாகிகளின் செயல்பாடு எப்படி இருந்தது. கட்சி நிர்வாகிகளை மாவட்ட பொறுப்பாளர்கள் அரவணைத்துச் செல்கின்றனரா. மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் மீதான நிறைகுறைகளை கேட்டறிந்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் அந்த நிறைகுறைகளை சரிசெய்து எழுச்சியுடன் தேர்தலை சந்திப்பது என நிர்வாகிகளுக்கு உற்சாகமளித்தார்.
கூடுதலாக, கட்சித் தலைமையிடம் குறைகள் இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்கள் என கேட்டு, நேர்காணலில் பங்கேற்ற நிர்வாகிகளை நெகிழச் செய்தார்.
அப்போது, கருத்து கூறிய நிர்வாகிகள், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற தங்களது எதிர்பார்ப்பையும் தயக்கமின்றி தெரிவித்ததை குறிப்பெடுத்துக்கொண்டதாக நேர்காணலில் பங்கேற்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.