Published : 09 Jan 2024 02:45 PM
Last Updated : 09 Jan 2024 02:45 PM
சென்னை: சென்னை மாநகர பேருந்துகளில் அதிக அளவிலான மக்கள் வந்து சேரும் இடமாக மெரினா கடற்கரை உள்ளது. அங்கு செயல்படும் அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மாநகரின் பல்வேறு பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளான ஆவடி, நங்கநல்லூர், கே.கே.நகர், பூந்தமல்லி, அய்யப்பன்தாங்கல், திருவான்மியூர், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதிக அளவில் வடசென்னை பகுதிகளான வியாசர்பாடி வழியாக கொடுங்கையூர் கண்ணதாசன் நகர், பெரம்பூர் ரயில் நிலையம் வழியாக பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. புறநகர் பகுதிகளில் இருந்து அண்ணா சதுக்கம் வந்து, வட சென்னைக்கு செல்வோர், வட சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு செல்வோர் சென்னை பல்கலைக்கழக பேருந்து நிறுத்தத்திலேயே இறக்கிவிடப்படுகின்றனர். அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தில் இறக்க ஓட்டுநர்களும், நடத்துநர்களும் மறுக்கின்றனர்.
இதேபோன்று மெரினா கடற்கரைக்கு வந்து, மீண்டும் வீட்டுக்கு பேருந்தில் அமர்ந்துசெல்ல விரும்புவோர், பேருந்து புறப்படும் இடத்துக்கே சென்று இடம்பிடிக்க வேண்டும்.அதற்காக, கலங்கரை விளக்கம், விவேகானந்தர் இல்லம், பாரதி சாலை போன்ற பகுதிகளில்உள்ள பேருந்து நிறுத்தங்களில் இருந்து பேருந்துகளில் அண்ணா சதுக்கத்துக்கு மக்கள் வருகின்றனர்.
இவர்களையும் சென்னைபல்கலைக்கழக பேருந்து நிறுத்தத்திலேயே நடத்துநர்கள் இறக்கிவிடுகின்றனர். இதனால் கைக்குழந்தை மற்றும் குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள், முதியோர்களுடன் வரும் குடும்பத்தினர் அவதி அடைகின்றனர். இவர்கள், மாலை நேரத்தில் மெரினாவுக்கு வரும் கூட்டத்தில் புகுந்து, அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்துக்கு செல்லவேண்டியுள்ளது. இவர்கள் சுரங்கப்பாதையில் இறங்கி, ஏறி கூட்டத்துக்கு நடுவே குழந்தைகளை கையில் பிடித்துக்கொண்டு செல்கின்றனர்.
நடந்து செல்லவே சுமார் 10 நிமிடங்கள் ஆகிவிடுகிறது. பேருந்து நிலையம் எதிரில் நிற்கும் ஆட்டோக்களாக இருந்தால் கூட, போர்நினைவு சின்ன கொடி மரத்தை சுற்றிக்கொண்டு வர வேண்டும் என்பதால், ரூ.75 கொடுப்பீர்களா என கேட்கின்றனர்.
இலவச பேருந்தில் மெரினாவுக்கே வந்துவிட்டோம். ஆனால் எதிரில் உள்ள பேருந்து நிலையத்துக்கு செல்ல ரூ.75 செலவிட வேண்டுமா என பயணிகள் வியப்புடன் கேட்கின்றனர். இப்படி பயணிகளை பேருந்து நிலையத்தில் இறக்காமல், முன்னதாகவே இறக்குமாறு உத்தரவு ஏதேனும் உள்ளதா என பேருந்து நடத்துநர்களிடம் கேட்டால், "இது ஒன்றும் புதிதில்லை. நீண்ட காலமாக இப்படிதான் செய்கிறோம். நேரத்தை கடத்தாமல் இறங்கி செல்லுங்கள்" என கோபமாக பதில்அளிக்கின்றனர்.
கீழே இறங்கி வந்து, பேருந்துகளை ஒழுங்குபடுத்துவது, டிக்கெட் பரிசோதனை போன்ற பணிகளில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கேட்டால், "எங்காவது உயரதிகாரி நின்றுகொண்டிருப்பார் அவரிடம் போய் சொல்லுங்கள்" எனக்கூறி பயணிகளை பிடித்து தள்ளி அவமதிக்கின்றனர்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பயணிகள் கூறும்போது, பேருந்து ஓட்டுநர்களும், நடத்துநர்களும் பேருந்தை எடுத்துச் சென்று தீவுத்திடல் அருகே பேருந்தை நிறுத்திவிட்டு புகைபிடிப்பது, புகையிலை பொருட்களை போடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இவர்கள் அடுத்த நடையை எடுப்பதற்கான நேரம் வரும்போது, பேருந்தை கொண்டு வந்து அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தில் நிறுத்துகின்றனர். இந்த பேருந்து சேவை மக்கள் நலனுக்காக இயக்கப்படுகிறதா அல்லது போக்குவரத்து தொழிலாளர்களின் வசதிக்காக இயக்கப்படுகிறதா என்றே தெரியவில்லை.
20 ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவர் கோட்டம், அஜந்தா, பிராட்வே, அண்ணா சதுக்கம், எல்ஐசி உள்ளிட்ட இடங்கள் முக்கியபேருந்து நிலையங்களாக இருந்தன. இப்பகுதிகளில் இருந்து மாநகரின் எந்த பகுதிகளுக்கு வேண்டுமானாலும் பேருந்தில் பயணிக்கும் நிலை இருந்தது. காலப்போக்கில் போக்குவரத்து கழகங்களின் தவறான முடிவுகளால் பேருந்து நிலையங்களுக்கான இணைப்பு துண்டிக்கப்படுகிறது. பல பேருந்து நிலையங்களில் மக்களை இறக்கி விடுவதில்லை. அதற்கு முன்னதாகவே இறக்கிவிட்டு விடுகின்றனர். இதனால் பயணிகள் பேருந்துகளை தவிர்த்து பிற போக்குவரத்து சேவைகளை நாடுகின்றனர்.
மக்களுக்கு அதிக செலவு ஏற்படுவதுடன், போக்குவரத்து கழகத்துக்கும் நஷ்டம் ஏற்படுகிறது. அந்த நஷ்டம் தொழிலாளர்களின் தலையில் தான் விழுகிறது என்று பயணிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, இதுதொடர்பாக ஏற்கெனவே ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் அறிவுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT