கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அவசரகால மையத்தில் அமைச்சர் ஆய்வு

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அவசரகால மையத்தில் அமைச்சர் ஆய்வு
Updated on
1 min read

சென்னை: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சில மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. இதையடுத்து, கனமழையை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கனமழையை எதிர்கொள்ளவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, சென்னையில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், நிவாரண பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: அனைத்து அடிப்படை வசதிகளுடன் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற மின் மோட்டார்கள், பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அணைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படும்போது, பொதுமக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து, உரிய வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, அணைகளிலிருந்து உபரி நீரை வெளியேற்றுமாறு நீர்வள ஆதாரத் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்து தீர்வுகாணும் வகையில், மாநில மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும், கூடுதலான அலுவலர்களுடன் செயல்படுகின்றன. இவ்வாறு தெரிவித்தனர்.

ஆய்வின்போது, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே. பிரபாகர், பேரிடர் மேலாண்மை இயக்குநர் சி.அ.ராமன், உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in