

உதகை: பந்தலூரில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த சிறுமியின் உடல் விமானம் மூலமாக சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப் பட்டதாக, மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுமியின் உடல் எம்பாமிங் செய்யப்பட்டு, விமானம் மூலமாக சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டது. சிறுமியின் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்து, மாவட்ட ஆட்சியர் மு.அருணா வழியனுப்பி வைத்தார். இது குறித்து அவர் கூறும்போது, பந்தலூரை அடுத்த மேங்கோ ரேஞ்ச் பகுதியில், கடந்த 6-ம் தேதி சிவசங்கர் குருவா என்பவரின் 3 வயது மகள் நான்சி, சிறுத்தை தாக்கி உயிரிழந்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அவர்களை சாலை மார்க்கமாக அனுப்பினால், சொந்த ஊர் சென்றடைய 3 நாட்கள் ஆகும். இதை கருத்தில் கொண்டு, நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா ஏற்பாட்டில், விமானத்தின் மூலமாக அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப் படுகிறார்கள். நெடுந்தூர பயணம் என்பதால், உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுமியின் உடல் ‘எம்பாமிங்’ செய்யப்பட்டு, கோவையிலிருந்து விமானம் மூலமாக சென்னைக்கு அனுப்பப்படுகிறது. பின்னர், அங்கிருந்து ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு அனுப்பிவைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராஞ்சியிலிருந்து அவரது சொந்த ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்வது தொடர்பாக, ராஞ்சி மாவட்ட ஆட்சியரிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுமி நான்சியின் பெற்றோருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவித்தார். அதன்படி, நேற்று முன்தினம் சிறுமியின் பெற்றோரிடம் ரூ.10 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது என்றார். சிறுமியின் உடலை எடுத்துச் செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் சிறுமியின் பெற்றோர் நன்றி கூறினர்.