ஒகேனக்கல்லில் தேமுதிகவினர் 200 பேர் மொட்டையடித்து விஜயகாந்துக்கு அஞ்சலி
தருமபுரி: ஒகேனக்கல்லில் தேமுதிகவினர் 200 பேர் மொட்டை அடித்து விஜய காந்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் அக்கட்சியினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், சில இடங்களில் கட்சி நிர்வாகிகள் மொட்டை அடித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன்படி, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 200-க்கும் மேற்பட்ட தேமுதிக தொண்டர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் மொட்டை அடித்துக் கொண்டு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஒகேனக்கல்லில் அமைக்கப்பட்ட விஜயகாந்தின் மார்பளவு திருவுருவச் சிலையை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதில்மாநில அவைத் தலைவர் இளங்கோவன் தலைமையில் மாநிலக் கொள்கை பரப்பு செயலாளர் மோகன் ராஜ்,மாவட்ட செயலாளர் குமார், மாநில மகளிரணி செயலாளர் மாலதி வினோத், விஜயகாந்த் மன்ற மாநிலத் துணை செயலாளர் மாரிமுத்து, அவைத் தலைவர்கள் தங்கவேல், உதய குமார், பொருளாளர் சீனிவாசன், ராமசந்திரன், பென்னாகரம் குமார், மணி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் பங்கேற்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு தமிழகத்தில் முதலாவதாக ஒகேனக்கல்லில் சிலை நிறுவப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
