Published : 09 Jan 2024 06:06 AM
Last Updated : 09 Jan 2024 06:06 AM
சென்னை: திருவல்லிக்கேனி அரசு கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நலமருத்துவமனையில் தரம் உயர்த்தப்பட்ட மகப்பேறு மற்றும் சிசு கண்காணிப்பு மென்பொருளை பிக்மி 3.0 (PICME 3.0) சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார். தொடர்ந்து, 6 செவிலியர்களுக்கு மகப்பேறு செவிலிய பயிற்றுநர் சான்றிதழ் வழங்கப் பட்டது.
மகப்பேறு திட்டங்கள் தொடக்கம்: சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனை இயக்குநர் மீனா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் களிடம் கூறியதாவது: 4 மகப்பேறு திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
சுகப்பிரசவங்களை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பராமரிப்பு, பயிற்சி பிரிவு, யோகா பயிற்றுவித்தல் தொடர்பான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
கர்ப்பிணிகள் மற்றும் பச்சிளங்குழந்தைகளை கண்காணிக்கும் வகையில் பிக்மி 3.0 (PICME 3.0) எனும் மென்பொருள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப் பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் ஏற்படுகிற பிரசவங்கள், மகப்பேறுவசதிகள், தொடர் பராமரிப்பு போன்ற பலவகையான தகவல்களை தொடர்ந்து கண்காணிக்க முடியும்.
இங்கு அறுவை அரங்கங்கள், சிறப்பு வார்டுகள், தீவிரசிகிச்சை பிரிவுகள் என்கின்ற வகையில் மிகப்பெரிய கட்டமைப்புகள் அமைக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT