Published : 09 Jan 2024 09:01 AM
Last Updated : 09 Jan 2024 09:01 AM

விழுப்புரம் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்தது கனமழை - தாழ்வான பகுதிகளில் வெள்ளம்

கனமழையால், விழுப்புரத்தில் கீழ்பெரும்பாக்கம் தரைப்பாலம் மூழ்கியது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

விழுப்புரம்: வானிலை ஆய்வு மையம் கடலோர மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’விடுத்திருந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்தது. இதனால் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்றுமுற்பகல் வரையில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. விழுப்புரம், கோலியனூர், வளவ னூர், காணை, கண்டமங்கலம், விக்கிரவாண்டி, மயிலம், செஞ்சி, திண்டிவனம், வானூர், மரக்காணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இடைவிடாமல் தொடர்ந்து பெய்த பலத்த மழையின் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை ( மில்லி மீட்டர் அளவில் ) விழுப்புரம் - 86, வானூர்- 120, திண்டிவனம் -74.5, செஞ்சி -19 மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மரக்காணத்தில் 133 மி.மீ மழை பதிவாகியுள்ளது. சராசரியாக விழுப்புரம் மாவட்டத்தில் 67.09 மி.மீ பதிவாகியுள்ளது. செஞ்சியில் விடிய விடிய பெய்த மழையால் காந்தி பஜார் சாலையில் மழைநீர் தேங்கி நின்றது. பேரூராட்சித் தலைவர் மொக்தியார் அலி மஸ்தான், செயல் அலுவலர் செந்தில்குமார் முன்னிலையில் துப்புரவுப் பணியாளர்கள் மழை நீரை வெளியேற்றினர்.

கனமழையால், விழுப்புரத்தில் கீழ்பெரும்பாக்கம் தரைப்பாலம் மூழ்கியது. இதனால், அப்பகுதியில் தற்காலிகமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது. கழிவு நீருடன் கலந்த மழைநீர் தேங்கி நின்று அப்பகுதி குளம் போல் காட்சி அளித்தது. இதனால் கீழ்பெரும்பாக்கம், கா.குப்பம், எருமனந்தாங்கால், பொய்யப்பாக்கம், பெரியார் நகர், இந்திரா நகர் உள்ளிட்ட 20-க்கும்மேற்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சுமார் 4 கி.மீ சுற்றி விழுப்புரம் நகருக்குள் வந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. நகராட்சி நிர்வாகம் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றிய பின், பிற்பகல் முதல் போக்குவரத்துக்கு காவல்துறையினர் அனுமதி அளித்தனர்.

விழுப்புரத்தில் உள்ள தாழ்வானபகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள் ளன. குறிப்பாக விழுப்புரம் நகராட் சிக்குட்பட்ட தாமரைக்குளம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியா மல் கடும் அவதிக்குள்ளாயினர். குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந் துள்ள மழைநீரை வெளியேற்ற விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப் போக்குடன் இருந்து வருவதாக தாமரைக்குளம் பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

விழுப்புரம் அருகே அரியலூர் திருக்கை கிராமத்தில் மழையில் மூழ்கிய நெல் வயல்கள்.

விக்கிரவாண்டி அருகே வி.சாத்தனூர் கிராமத்தில் உள்ள இரண்டுதெருக்கள் முழுவதும் முழங்கால் அளவுக்கு மழைநீரால் சூழப்பட்டதால், பொதுமக்கள் மரக்கிளை களை சாலையில் போட்டு, கொட்டும்மழையில் குடை பிடித்தபடி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விக்கிரவாண்டி போலீஸாரும், அரசு அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தேங்கிய மழைநீரை அகற்றஉரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். தொடர்ந்து கிராமமக்கள் மறியலை கைவிட்டனர்.

மின் சேவையில் பாதிப்பு: தொடர் கன மழையின் காரணமாக கெடார் துணை மின் நிலையத்தில் உள்ள மின்சார ட்ரான்ஸ் பார்மர்களில் பழுது ஏற்பட்டது. இதேபோல் ஆங்காங்கே உள்ள ‘மின்சார பீடர்’ எனப்படக்கூடிய மின்னூட்டிகளிலும் பழுது ஏற்பட் டுள்ளது. இதன் காரணமாக பல் வேறு கிராமங்களில் நேற்று அதிகாலை முதல் மின்சாரம் துண்டிக் கப்பட்டது.

விழுப்புரம் அருகே உள்ள காணை, வெங்கந்தூர், கெடார், சித்தாமூர், வாழப்பட்டு, மாம்பழப் பட்டு, கோனூர், கல்பட்டு, தும்பூர்,செங்காடு, இளங்காடு, மேல கொந்தை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மழையின் தாக்கம் குறைந்த பிறகு பழுதுகள் சரி செய்யப்பட்டு மின்சாரம் வழங் கப்பட்டது.

ரயில்வே சுரங்கப் பாதை மூழ்கியது: விழுப்புரம் அருகே தென்குச் சிப்பாளையம் ரயில்வே சுரங்கப் பாதையும் மழைநீரில் மூழ்கியதால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மலட்டாற்றை கடந்து செல்லும் மேட்டுபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் போக்குவரத்துக்கு தடைவிதித்து, தடுப்புகளை வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கடந்த மாதம் வரை புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் பகுதியில் கனமழை பெய்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் மிதமான மழைப்பொழிவே இருந்து வந்தது. ஆனால், நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று முற்பகல் வரை பெய்த கனமழை அதற்கு மாறாக வலுத்து பெய்துள்ளது. விரைந்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும் இந்த கனமழை காரணமாக, விழுப்புரம் சுற்றுவட்டார கிராமங்களில் சம்பா அறுவடைப் பணிகளும், நடவுப்பணிகளும் முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டன.

தை மாதத்தில் அறுவடைக்கு தயார் என்ற நிலையில் இருந்த, பெரும்பாக்கம், வாணியம்பாளையம், கப்பூர், ஆனாங்கூர், காணை உள்ளிட்ட பகுதியில் சுமார் 500 ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பயிர்கள் மழைநீரில் மூழ்கி, சாய்ந்து கிடக்கின்றன. வேளாண் துறை அதிகாரிகள் விரைந்து கணக்கெடுப்பு நடத்தி, உரிய இழப்பீட்டு தொகையை பெற்றுத்தர வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x