Published : 09 Jan 2024 04:08 AM
Last Updated : 09 Jan 2024 04:08 AM
மயிலாடுதுறை / காரைக்கால் / நாகப்பட்டினம் / திருவாரூர் / தஞ்சாவூர்: மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது, ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும் சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்தது. இதன் காரணமாக சீர்காழி, கொள்ளிடம், காழியப்பநல்லூர், பொறையாறு உள்ளிட்டப் பகுதிகளில் தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சீர்காழியில் சில கடைகள், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள வைத்திய நாத சுவாமி கோயிலுக்குள்ளும் மழைநீர் தேங்கியது.
மாப்படுகை, அருண் மொழித்தேவன், மணலூர், செருதியூர், நல்லத்துக்குடி, வைத்தீஸ்வரன் கோவில், கடக்கம், பெரம்பூர், அரசூர் உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் வயலில் தேங்கிய நீரில் சாய்ந்துள்ளன. இந்த மழை நீடித்தால், அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் முளைவிட்டு, பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தரங்கம்பாடியில் கடல் சீற்றமாகக் காணப்பட்டது.
சீர்காழியில் அதிகபட்சமாக 24 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சீர்காழி பகுதியில் மழைப் பொழிவு அதிகரித்து, பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், சீர்காழி சுற்று வட்டாரப் பகுதிகளில் மழைநீர் உடனடியாக வடியவும், பாதிப்புகளை தடுக்கவும் சிறப்பு திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். காரைக்கால் மாவட்டத்தில் காரைக்கால், வரிச்சிக்குடி, திருமலை ராயன் பட்டினம் உட்பட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நேற்று முன்தினமும் நேற்றும் கனமழை பெய்தது.
இதன் காரணமாக கோட்டுச்சேரி குமரப் பிள்ளை வீதி உள்ளிட்ட பல்வேறு தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. திருவேட்டக் குடி மாதாகோயில் வீதி, திருமலைராயன்பட்டினம் பகுதியில் உள்ள 2 வீடுகளில் சுவர்கள் இடிந்து விழுந்தன. கருக்கங்குடி, கோட்டாபாடி, செல்லூர், சுரக்குடி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்துள்ளன.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று காலை 12.30 மணியுடன் பதிவான மழையளவு (மில்லிமீட்டரில்): சீர்காழி 238.60, கொள்ளிடம் 196.60, மயிலாடுதுறை 129.90, மணல்மேடு 116.40, தரங்கம்பாடி 98.90, செம்பனார்கோவில் 64.40. காரைக்காலில் நேற்று காலை 8.30 மணி வரை 139.5 மிமீ மழை பதிவானது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று மாலை வரை பரவலாக மழை பெய்தது. சுவாமி மலை, பாபு ராஜபுரம், ஏரகரம், உத்திரை, திருப்புறம்பியம், நீலத்த நல்லூர், அசூர் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா நெற்பயிர்கள் ஆயிரக் கணக்கான ஏக்கரில் வயலில் சாய்ந்துள்ளன.
இதனால், பொங்கலுக்கு பிறகு அறுவடை செய்யலாம் என காத்திருந்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும், மழையால் மாவட்டத்தில் 3 ஓட்டு வீடுகள், 12 கூரை வீடுகள் என மொத்தம் 15 வீடுகள் பகுதியாக இடிந்து சேதமடைந்துள்ளன. மாவட்டத்தில் நேற்று காலை8 மணி வரை பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்): திருவிடைமருதூர் 116, கும்பகோணம் 105, அணைக்கரை 103, மஞ்சளாறு 91, பாபநாசம் 73, திருவையாறு 47, நெய்வாசல் 46, அய்யம்பேட்டை 44, தஞ்சாவூர் 43, ஒரத்தநாடு 39, குருங்குளம் 31, பூதலூர், 25, வெட்டிக்காடு 25.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால், திருவாரூர் விஜயபுரம் தாய்சேய் நல மருத்துவமனையை மழைநீர் சூழ்ந்தது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிகள் திருவாரூர் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டனர். பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இங்கு ரயில்வே கீழ்பாலத்தில் மழை நீர் தேங்கியுள்ளது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சில நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய தருணத்தில் இருந்த சம்பா பயிர்கள் 3,000 ஏக்கரில் முற்றிலுமாக வயலில் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளன.
மழையளவு (மில்லி மீட்டரில்): திருவாரூர் 210, நன்னிலம் 164, குடவாசல் 134, வலங்கைமான் 107, கொரடாச்சேரி 103, நீடாமங்கலம் 88, திருத்துறைப்பூண்டி 23. நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவுகனமழை பெய்தது. இதனால், பல்வேறு பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் மழை நீரில்மூழ்கியுள்ளன. மாவட்டத்தில் நேற்று மதியம் 12 மணி வரை பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்): வேளாங்கண்ணி 206.2, நாகப்பட்டினம் 174.2, திருப்பூண்டி 131.4, தலைஞாயிறு 96.8, திருக்குவளை 65.6, வேதாரண்யம் 39.4, கோடியக்கரை 36.4.
3 பேர் உயிரிழப்பு: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள அதம்பார் கிராமத்தைச் சேர்ந்த மின்வாரிய ஒப்பந்தஊழியர் ராஜசேகர் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் சுவர் இடிந்து தூங்கிக் கொண்டிருந்த ராஜசேகரின் மகன் மோகன் தாஸ் ( 11 ), மகள் மோனிஷா ( 9 ) ஆகியோர் மீது விழுந்ததில் காயமடைந்த இருவரையும் உடனடியாக நன்னிலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மோனிஷா, அங்கு உயிரிழந்தார்.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏர்வாடி ஊராட்சி விச்சூர் காலனி தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி மணியம்மாள் ( 60 ). இவர், வீட்டில் நேற்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த போது, மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்ததில் படுகாயமடைந்து, நாகை மருத்துவக் கல்லூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிரிழந்தார்.
இதேபோல, கீழ்வேளூரை அடுத்த புலியூர் மேலத் தெருவைச் சேர்ந்த சேகருக்கு சொந்தமான காலனி வீட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேகரின் தம்பி சண்முகம் மகன் அஜித் ( 15 ) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அஜித்தின் நண்பர்கள் நரேஷ் ( 14 ), வெற்றிவேல் ( 15 ), லிபன் ராஜ் ( 11 ) ஆகியோர் நேற்று தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மழையால் காலனி வீட்டின் சிமென்ட் மேற்கூரை இடிந்து சிறுவர்கள் 4 பேர் மீதும் விழுந்தது. இதில், படுகாயமடைந்த அஜித் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 3 பேரும் நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT