மலைப்பகுதியில் கன மழையால் கரைபுரளும் தாமிரபரணி - குளங்களை விரைவில் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

தாமிரபரணி ஆற்றில் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டை தாண்டி நேற்று கரைபுரண்டு பாய்ந்த வெள்ளம்.
தாமிரபரணி ஆற்றில் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டை தாண்டி நேற்று கரைபுரண்டு பாய்ந்த வெள்ளம்.
Updated on
1 min read

தூத்துக்குடி: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் கரைபு ரண்டு பாய்கிறது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டை தாண்டி நேற்று விநாடிக்கு 11 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலுக்கு சென்றது.

பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு உட்பட திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து அணைகளும் ஏற்கெனவே முழு கொள்ளளவை எட்டிவிட்டன. இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது.

எனவே, தாமிரபரணி ஆற்றில் மக்கள் இறங்கவோ, குளிக்கவோ, கால் நடைகளை குளிப்பாட்டவோ, ஆற்றங்கரையோர பகுதியில் நின்று செல்பி எடுக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணையான ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டை தாண்டி நேற்று 11 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலுக்கு சென்றது. தாமிரபரணி ஆற்றில் கடந்த டிசம்பர் 17, 18-ம் தேதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தாமிரபரணி பாசனத்தின் கீழுள்ள பல குளங்கள் மற்றும் கால்வாய்களின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டது.

இதனால் குளங்களில் தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலையில், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டை தாண்டி விநாடிக்கு 11 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலுக்கு செல்கிறது. எனவே போர்க்கால அடிப்படையில் குளங்கள் மற்றும் கால்வாய்களின் கரைகளை சீரமைத்து தண்ணீரை சேமிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in