

மதுரை: மதுரை மாட்டுத்தாவணியில் ஒருங் கிணைந்த சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் செயல்படுகிறது. இங்கு வரும் சைக்கிள் முதல் லாரி வரையிலான அனைத்து வாகனங்களுக்கும் வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் வாகனங்களை நிறுத்துவதற்கு எந்த ஒரு வசதியும் செய்யப்படவில்லை.
‘இந்து தமிழ் திசை' உங்கள் குரல் சேவையில் தொடர்புகொண்ட மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த சகுந்தலாதேவி கூறியதாவது: மாட்டுத்தாவணி காய்கறி சந்தையின் நுழைவாயிலிலேயே மாநகராட்சியால் வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால் வாகனங்களை நிறுந்த எந்த வசதியும் செய்யப்படாததால், அனைத்து வாகனங்களும் ஒழுங்கற்ற முறையில் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன. வார இறுதி நாளில் வாகனங்கள் இரட்டை வரிசையில் நிறுத்தப்படுவதால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. மேலும் இங்கு மழைநீர் வெளியேற வழியில்லாததால் மழைக் காலங்களில் சந்தை முழுவதும் சேறும், சகதியுமாகி விடுகிறது.
கட்டண ரசீதில் “திறந்தவெளியில் நிறுத்தும் வாகன கட்டணம்’’ எனக் குறிப்பிட்டுள்ளனர். சந்தை வளாகத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு பாதுகாப்பு இல்லாததால் அடிக்கடி வாகனங்கள் திருடு போகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்தால் போலீஸார் வழக்குப்பதிவு செய்வதில்லை. அதனால், காய்கறி சந்தையில் திருடுபோகும் வாகனங்கள் விவரம் வெளிச்சத்துக்கு வருவதில்லை.
மாநகராட்சி நிர்வாகம், சந்தையில் வாகனக் காப்பகம் அமைக்காமலேயே கட்டணம் வசூலிப்பது தவறு. கட்டணம் வசூலித்தால் வாகனங்களைப் பாதுகாப்பதும் கடமையல்லவா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டை ஆய்வு செய்து, இங்குள்ள குறைபாடுகளைக் களைய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.