Published : 08 Jan 2024 05:07 AM
Last Updated : 08 Jan 2024 05:07 AM

சிறிய ரக ராக்கெட்களை ஏவுவதற்காகவே குலசேகரன்பட்டினத்தில் புதிய ஏவுதளம் : இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்

சென்னை: சிறிய ரக ராக்கெட்களை ஏவுவதற்காகவே குலசேகரன்பட்டினத்தில் ஏவுதளம் உருவாக்கப்படுகிறது என்று இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்தார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், வான்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை தொடர்பான வல்லுநர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில், டிஆர்டிஓ முன்னாள் தலைவர் கிறிஸ்டோபர் மற்றும் இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் ஆகியோர் உரையாடினர். அப்போது, கேள்விகளுக்கு பதிலளித்து சோம்நாத் கூறியதாவது:

சந்திராயன் 3 என்பது மக்களின் மனங்களுடன் தொடர்புடையது. சந்திராயன் 2-ன் தோல்வியில் இருந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டோம். என்ன தவறு நேர்ந்தது என்பதை கண்டறிந்து இதன் மூலம் சந்திராயன்-3 ன் இலக்கை நிர்ணயித்து செயல்பட்டோம்.

நிலவில் இருந்து முந்தைய லேண்டரின் பாகங்களை பெற்று புதியதை தயாரிக்க முடியாது. அவ்வாறு பாகங்களை பெற்றால் என்ன தவறு நிகழ்ந்தது என்பதை தெரிந்து கொள்ளலாம். புதிதாகதான் தொடர்ந்து தயாரிக்க முடியும். எந்த குறிப்பிட்ட பகுதியில் என்ன தவறு நிகழ்ந்துள்ளது என்பதை அறிந்து அதை கருத்தில் கொண்டு புதியது தயாரிக்கப்பட்டது.

நாம் இன்னொரு தோல்வியை சந்திக்கக்கூடாது. எனவே மேலும் இரண்டாண்டுகள் சந்திரயான் 3- தயாரிக்க எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்பின்பு நாங்கள் அந்த செயற்கைக் கோளை உருவாக்கி தொடர்ந்து பல பரிசோதனைகளை தொய்வின்றி மேற்கொண்டோம். எங்களது முக்கியமான இலக்கு மெதுவாக தரையிறங்கச்செய்வதுதான். இதற்கான உத்தரவை மட்டும் நான் வழங்கினேன். இதற்காக நாங்கள் 6 மாதங்கள் கூடுதலாக எடுத்துக் கொண்டோம். இதுதான் எங்களின் வெற்றிக்கு காரணமானது.

ககன்யானை பொறுத்தவரை, கரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திட்டம் நிறைவேறுவது தள்ளிப்போனது. இந்த ஆண்டில், ஆளில்லா ராக்கெட் அனுப்புவது தொடர்ந்து ஆய்வு செய்யப்படும். அடுத்த 2025-ம் ஆண்டு இறுதியில் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான பணிகள் இறுதியடையும். 100 சதவீதம் நம்பிக்கை ஏற்பட்ட பின்னரே அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான திட்டமிடல் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு பாதுகாப்பும் முக்கியம்.

குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப்படும் புதிய ஏவுதளம் என்பது, ஹரிகோட்டாவுக்கு மாற்றானது அல்ல. கூடுதல் ஏவுதளமாக அமைக்கப்படுகிறது. குலசேகரன்பட்டினம் ஏவுதளம் என்பது தென் பகுதியில் இருந்து சிறிய ராக்கெட்களை ஏவுவதற்கு வசதியாக இருக்கும். இந்த ஏவுதளத்தில் இருந்து குறைந்த காலகட்டத்தில் 20 அல்லது 30 ராக்கெட்களை ஏவ முடியும். இது, அதிகளவிலான சிறிய ராக்கெட்களை உருவாக்குவதற்கு வசதியாக இருக்கும்.

இதன்மூலம், அப்பகுதியை சுற்றிலும் பல தொழில் வளாகங்கள் உருவெடுக்கும். ராக்கெட் தயாரித்தலில் தற்போது வருவாய் அதிகம் ஈட்ட இயலாது. அதே நேரம் செயற்கைக்கோள் தயாரித்தலில், வருவாய் பெற முடியும். மேலும், தொழில்துறையினர், செயற்கைக் கோளில் பயன்படுத்தப்படும் பல்வேறு ‘அப்ளிகேசன்’களை உருவாக்கும் பணிகளில் ஈடுபடலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x