

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி பாரம்பரியமாக நடைபெறும் இடத்திலேயே இந்த ஆண்டும் நடைபெறுகிறது. அதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா இன்று காலை நடைபெறுகிறது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி வரும் 17-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா இன்று (ஜன. 8) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இதில் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
பாலமேடு... அலங்காநல்லூர் அருகேயுள்ள பாலமேட்டில் வரும் 16-ம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற உள்ளது. இதையொட்டி முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது. இதில், பேரூராட்சித் தலைவர் சுமதி, துணைத் தலைவர் ராமராஜ், செயல் அலுவலர் தேவி, கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்துக் குழுத் தலைவர் மலைச்சாமி, செயலர் பிரபு, பொருளாளர் ஜோதி தங்கமணி மற்றும் மடத்துக் குழு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, வாடிவாசலுக்கு வண்ணம் பூசும் பணி, கேலரி அமைக்கும் பணி, வாடிவாசல் மைதானத்தை இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி உள்ளிட்டவை தொடங்கப்பட்டுள்ளன.
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.