மயூர வாகன சேவன விழாவின் 100-வது ஆண்டு சிறப்பாக கொண்டாடப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

மயூர வாகன சேவன விழாவின் 100-வது ஆண்டு சிறப்பாக கொண்டாடப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
Updated on
1 min read

சென்னை: திருவான்மியூர் குமரகுருபர சுவாமி கோயிலில் மயூர வாகன சேவன விழாவின் 100-வது ஆண்டு சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சியுடன் விமரிசையாகக் கொண்டாடப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்து சமய அறநிலையத் துறை தனது நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்குகள் நடத்துதல், பக்தர்களுக்கான தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குவதோடு, கமலமுனி, சுந்தரானந்தர், பாம்பாட்டி போன்ற சித்தர்களுக்கும், சேக்கிழார், அவ்வையார், வள்ளலார், பாம்பன் சுவாமிகள், சமயக் குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர், ஸ்ரீமத் நாதமுனிகள், அவரது பேரன் ஆளவந்தார் ஆச்சாரியார் போன்ற அருளாளர்களுக்கும் விழா எடுத்து சிறப்பு செய்து வருகிறது.

முருகப்பெருமான், பாம்பன் சுவாமிகளின் தூய பக்தியையும், அவர் இயற்றிய சண்முகக் கவசத்தின் மகிமையையும் தம் மெய்யடியார்கள் அறியும் வண்ணம் திருவிளையாடல் புரிந்த நிகழ்வு மயூர வாகன சேவன விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இச்சிறப்புமிக்க மயூர வாகன சேவன விழாவின் 100-வது ஆண்டு விழா ஜன.10 முதல் 12-ம் தேதி வரை மூன்று நாட்கள் திருவான்மியூர், பாம்பன் குமரகுருபர சுவாமி கோயிலில் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

இவ்விழாவில் 1967-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட ‘பாம்பன் சுவாமிகளின் சரித்திரம்’ என்னும் புத்தகம் மறுபதிப்பு செய்யப்பட்டு புதுப்பொலிவோடு வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 108 மாணவ, மாணவிகளால் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளால் பாடப்பட்ட சண்முக கவசம் மற்றும் குமாரஸ்தவம் பாராயணம் செய்தல், ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதோடு, நாள் முழுவதும் அன்னதானமும் வழங்கப்பட உள்ளது.

தவத்திரு ஆதீனங்கள், ஆன்மிக சான்றோர் மற்றும் இறையன்பர்களின் பங்கேற்போடு மயூர வாகன சேவன விழாவின் 100-வது ஆண்டு விழாவிமரிசையாக கொண்டாடப்படும். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in