

மதுரை: அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு அரங்கைத் திறக்க ஜனவரி 22 அல்லது 23 ஆகிய இரு நாட்களில் ஏதாவது ஒரு நாள் மதுரை வர உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினை சுமார் ஒரு லட்சம் பேர் திரண்டு வரவேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
மதுரை புறநகர் வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான பி.மூர்த்தி தலைமையில் திருப் பாலையில் நடந்தது. கூட்டத்தில் சேலத்தில் நடைபெறும் திமுக இளைஞர் அணி மாநாட்டுக்கு ஆயிரக் கணக்கான தொண்டர்களுடன் செல்வது, தைப் பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாக்களை வெற்றி கரமாக நடத்துவதற்கு துணைபுரிவது மற்றும் வர இருக்கிற மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் பற்றியும் நிர்வாகிகள் ஆலோசித் தனர்.
கூட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது; அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வழக்கம் போல் நடக்கும் பாரம் பரியமான வாடிவாசல் இடத்தில் இந்த ஆண்டும் நடக்கும். அலங்காநல்லூர் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக் கட்டு அரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். அவர், ஜனவரி 22 அல்லது 23-ம் தேதிகளில் ஏதாவது ஒரு தேதியை முடிவு செய்து வர வாய்ப்புள்ளது. இன்னும் ஜல்லிக்கட்டு அரங்கு திறப்பு விழா தேதி முடிவாகவில்லை.
ஆனால், இந்த இரண்டு நாட்களில் ஏதாவது ஒரு தேதியில் உறுதியாக முதல்வர் இந்த அரங்கை திறந்து வைக்க வர இருக்கிறார்.மதுரை வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பை வழங்க வேண்டும். சுமார் 1 லட்சம் பேர் திரண்டு வரவேற்க வேண்டும். அதற்கு தற்போதே நிர்வாகிகள் ஏற்பாடு களைச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.