Published : 08 Jan 2024 04:06 AM
Last Updated : 08 Jan 2024 04:06 AM

“பாஜகவை தோற்கடித்து ஜனநாயகத்தை பாதுகாப்போம்” - திருமாவளவன் பேச்சு

படம்: ர.செல்வமுத்துகுமார்

திருச்சி: மக்கள் அதிகாரம் சார்பில், மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்போம், இண்டியாவை ஆதரிப்போம் மாநாடு திருச்சியில் நேற்று நடைபெற்றது.

மாநில பொருளாளர் காளியப்பன் தலைமை வகித்தார். பிரிவு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் அன்பு, கோவன், கம்பம் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில்,திமுக தலைமைக்கழக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் பேசியது: அரசியலமைப்பு சட்டம், ‘இந்த நாட்டு குடிமக்களாகிய நாம் நமக்காக இந்த அரசியல் அமைப்பு சட்டத்தை வழங்கிக் கொள்கிறோம்’ என்கிறது. பலமொழி, இனம் ஒருங்கிணைந்து வாழ்வதை அழிக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. பாஜகவை அப்புறப்படுத்துவதன் மூலம் நம்முடைய உரிமைகளை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியது: ஆர்எஸ்எஸ், சங் பரிவார் அமைப்பினர் தாங்கள் செயல்படுத்த நினைப்பதை சட்டம் மற்றும் நீதிமன்றம் மூலம் செய்கின்றனர். சட்டம், நீதிமன்றம் மூலம்அவர்கள் விரும்புவதை நடத்திக் கொள்ளும் இடத்தில் சங்பரிவார் அமைப்பு உள்ளது. பாஜகவை தோற்கடிப்போம் என்றால் ஆர்எஸ்எஸ், சங் பரிவார் அமைப்பை, அவர்களின் கருத்தியலை தோற்கடிக்கிறோம் என்று பொருள். 1925-ம் ஆண்டு தொடங்கி நூற்றாண்டை கொண்டாட உள்ள ஆர்எஸ்எஸ் இயக்கம், இந்தியாவுக்கு இந்து ராஷ்டிரம் என பெயர் சூட்ட தயாராகி வருகிறது.

இந்தியாவை மதம் சார்ந்த நாடாக அறிவிக்கவும், அரசை மதம் ஆட்சி செய்ய வேண்டும் எனவும் விரும்புகின்றனர். இதற்கு தடையாக உள்ள இந்திய அரசியல் அமைப்பு சட்டம் தான் சங் பரிவார்களின் முதல் பகை. இந்துத்துவா என்பது சனாதனமும், கார்ப்பரேட் அரசியலும் சேர்ந்ததாக இங்குஉள்ளது. இந்துத்துவ அஜெண்டாவில் மத வெறுப்பு அரசியல் முன்னிறுத்தப்படுகிறது. இவர்கள் எதையும் செய்வார்கள் என்பதற்கு மோடியின் அனைத்து நடவடிக்கைகளும் சாட்சியாக உள்ளன

இப்படி ஒரு ஆபத்தான சூழலில் மக்கள் அதிகாரம் ஜனநாயகத்தை காக்க முக்கிய முடிவை எடுத்துள்ளது. மத சார்பின்மை என்ற புள்ளியில் காங்கிரஸ் நம்முடன் கை கோத்து நிற்கிறது. வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடித்து, இண்டியா கூட்டணியை வெற்றி பெற வைத்து ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்றார். கூட்டத்தில் மனித நேய மக்கள் கட்சி தலைவரும் எம்எல்ஏ-வுமான ஜவாஹிருல்லா, மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் கோபட் காந்தி, காங்கிரஸ் மூத்த நிர்வாகி திருச்சி வேலுச்சாமி, தமுஎகச மதுக்கூர் ராமலிங்கம், திக துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதி வதனி உட்பட பலர் பங்கற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x