Published : 13 Aug 2014 10:38 AM
Last Updated : 13 Aug 2014 10:38 AM

160 பட்டாசு ஆலைகள் மீண்டும் செயல்பட அனுமதி: குறைபாடுகள் சரிசெய்யப்பட்டதாக தகவல்

விருதுநகர் மாவட்டத்தில் விதி முறைகளை மீறி செயல்பட்டதாக, உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்ட 160 பட்டாசு ஆலைகள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 840 பட்டாசு ஆலைகள் இயங்கிவருகின்றன. இவற்றில் 5 அறைகள் மட்டுமே உள்ள சிறிய பட்டாசு ஆலைகள் மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று இயங்க வேண்டும். இப்படி

விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 167 பட்டாசு ஆலைகள் மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று இயங்கி வருகின்றன. இந்த சிறிய ஆலை களில் ஒரு நாளைக்கு 15 கிலோ எடை வரையிலான வெடிகள் தயாரிக்க தேவையான மூலப் பொருட்களை மட்டுமே பயன் படுத்த முடியும். அதற்கு மேல் வெடிபொருட்களைப் பயன்படுத்த, சென்னை மற்றும் நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும்.

இந்நிலையில், சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் சீனப் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவதாகவும், விதிமுறைகள் மீறப்படுவதாகவும் புகார் எழுந்தது. அதனால், மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள், கடந்த ஜூன் முதல் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளிலும் தீவிர ஆய்வு செய்தனர்.

இதில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்ற 130 பட்டாசு ஆலைகளின் உரிமங்களுக்கும், சென்னை மற்றும் நாக்பூர் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் உரிமம்பெற்ற 30 ஆலைகள் என, 160 பட்டாசு ஆலை களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.

மேலும் பல ஆலைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டதோடு, 67 பட்டாசு ஆலைகளின் உரிமங்களை தற்காலிகமாக ரத்து செய்தும் உத்தரவிடப்பட்டது. இதனால் பட்டாசு உற்பத்தி மிகவும் பாதிக்கப் பட்டது.

இந்நிலையில், தொழிற்சாலை யில் இருந்த குறைபாடுகள் நீக்கப்பட்டுவிட்டதாக, மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்ற பட்டாசு உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஜி.விநாயக மூர்த்தி தலைமையில், பட்டாசு உற்பத்தியாளர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் செ.முனு சாமியை திங்கள்கிழமை சந்தித்து மனு கொடுத்தனர்.

அதையடுத்து, தற்காலிக தடை விதிக்கப்பட்ட பட்டாசு ஆலைகளில் மீண்டும் உற்பத்தியை தொடங்க அனுமதி அளிப்பதாக மாவட்ட வருவாய் அலுவலர் செ.முனுசாமி தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, ’விபத்துகள் தடுக்கப்பட வேண்டும் என்ற குறிக்கோள் காரணமாகவே விதிமீறல் கண்டறியப்பட்ட 160 ஆலைகளின் உரிமங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

கடந்த ஒரு மாதமாக உற்பத்தி செய்யாமல் தடை விதிக்கப்பட்டதே அவர்களுக்கு தண்டனை. குறைபாடுகள் பட்டாசு ஆலைகளில் சரிசெய்யப்பட்டுவிட்டன.

இருப்பினும், இதை ஆய்வு செய்து அனைத்து தொழிற் சாலைகளும் மீண்டும் உற்பத்தியை தொடங்க அனுமதி வழங்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்’ என அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x