Published : 07 Jan 2024 05:26 AM
Last Updated : 07 Jan 2024 05:26 AM

திருச்சியில் சித்த மருத்துவத்துக்கான எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் கோரிக்கை

சென்னை: சித்த மருத்துவத்துக்கான எய்ம்ஸ் மருத்துவமனையை திருச்சியில் அமைக்க வேண்டும் என்று மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சரிடம் தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை வைத்துள்ளார்.

கேப்டன் சீனிவாசன் மூர்த்திமத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிலையம் வைரவிழா கொண்டாட்டம் மற்றும் பன்னாட்டு மாநாடு சென்னையில் நேற்று தொடங்கியது. இரண்டுநாட்கள் நடைபெறும் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சர் முன்ஞ்பாரா மகேந்திரபாய் பங்கேற்றார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையர் மைதிலி கே.ராஜேந்திரன், மத்திய ஆயுஷ் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

வைர விழா கொண்டாட்டம்: கேப்டன் சீனிவாசன் மூர்த்திமத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிலையம் வைரவிழா கொண்டாட்டம் தற்போது மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. இக்கருத்தரங்கில் 200-க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநர்கள் தங்களுடைய ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்து இந்திய மருத்துவத்துறைக்கு தேவையான எதிர்கால வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் விவாதிக்க உள்ளனர். தமிழகத்திலுள்ள மருத்துவ கட்டமைப்புகள் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாதவகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 2021 ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கப்பட்டது. அத்திட்டத்தில் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், பிசியோதெரபி, டயாலிசிஸ் போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை வீடுகளுக்கே தேடிச் சென்று மருத்துவம் பார்க்கும் அப்பணி மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 1.07 கோடி பேர் பயன்பெற்று இருக்கிறார்கள்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் விரிவாக்கமான தொழிலாளர்களை தேடி மருத்துவம்என்கின்ற அறிவிப்பின்படி திருவள்ளுர் மாவட்டத்தில் வரும் 8-ம் தேதி தொடங்கப்படவுள்ளது.

ஆளுநரிடம் பல்வேறு மசோதாக்கள் கிடப்பில் இருப்பதுபோல் சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதாவும் கிடப்பில் இருக்கிறது. சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் தமிழகத்தில் வருவதற்கு மத்தியஅரசு உறுதுணையாக இருக்க வேண்டும்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளதை போல், சித்த மருத்துவம் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தின் திருச்சியில் அமைய வேண்டும் என்கின்ற கோரிக்கை இந்த நேரத்தில் மத்திய இணை அமைச்சரிடம் வைக்கிறேன். இந்த இரண்டு கோரிக்கையையும் மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சருடன் பேசி நிறைவேற்றி தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x