Published : 07 Jan 2024 06:00 AM
Last Updated : 07 Jan 2024 06:00 AM

பெரியார் பல்கலை. துணைவேந்தர் கைது விவகாரம் | சட்ட விதி, மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன: பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு புகார்

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பின் கூட்டு நடவடிக்கைக் குழு தலைவர் ரத்தினசாமி. உடன், கூட்டமைப்பு நிர்வாகிகள்.

சேலம்: பெரியார் பல்கலை. துணைவேந்தர் கைது விவகாரத்தில் சட்ட, மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு புகார் தெரிவித்துள்ளது.

சேலம் பெரியார் பல்கலை.துணைவேந்தர் ஜெகநாதன்,பதிவாளர் (பொ) தங்கவேல், பேராசிரியர்கள் சதீஷ், ராம் கணேஷ் ஆகியோர் இணைந்து `பியூட்டர் ஃபவுண்டேஷன்' என்றநிறுவனத்தை தொடங்கி மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றப் பிணையில் விடுவிக்கப்பட்டார். வழக்கில் தொடர்புடைய மற்றவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பின் கூட்டு நடவடிக்கை குழுத் தலைவர் ரத்தினசாமி, சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் கைதுசெய்யப்பட்டது தொடர்பான உண்மைகளை அறிய, கூட்டமைப்பு சார்பில் மூத்த வழக்கறிஞர், காவல்துறை முன்னாள் உயர் அதிகாரி,பத்திரிகையாளர், கல்வியாளர் ஆகியோர் அடங்கிய உண்மைகண்டறியும் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு பலரை விசாரித்தும், ஆவணங்களைச் சேகரித்தும் அறிக்கை அளித்துள்ளது.

துணைவேந்தர் மீது கருப்பூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் சட்டப் பிரிவுகள், அதன் பின் நடந்த சம்பவங்களை ஆய்வு செய்ததில், காவல்துறையினர் மேல்மட்ட கட்டளையால், சில உயரதிகாரிகள் தூண்டுதலால் புனையப்பட்ட புகாராக இது அறியப்படுகிறது.

பெரியார் பல்கலை.யில் தொடங்கப்பட்ட `பியூட்டர் ஃபவுண்டேஷன்' லாப நோக்கு இல்லாத,சட்டப்படி பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகும். இதேபோல ஏற்கெனவே ஒரு நிறுவனம் பெரியார் பல்கலை.யில் செயல்பட்டுவருகிறது. இதுபோன்ற நிறுவனங்கள் பல்வேறு பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழங்களில் செயல்பட்டு வருகின்றன. இவை உயர் கல்வி ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க உதவுகின்றன.

`பியூட்டர் ஃபவுண்டேஷன்' செயல்படகடந்த நவம்பர் மாதமேசிண்டிகேட் கூட்டத்தில் அனுமதிகோரப்பட்டது. அந்த நிறுவனத்தில் இதுவரை எந்த பணப் பரிவர்த்தனையும் நடைபெறவில்லை. ஒரு ரூபாய்கூட பணப் பரிவர்த்தனை செய்யாத நிறுவனம், எவ்வாறு தவறு செய்ய முடியும்.

துணைவேந்தர் கைது விவகாரத்தில் நடைபெற்றுள்ள சட்ட விதிமுறை மீறல்கள், மனித உரிமை மீறல் ஆகியவற்றை, உரிய சட்ட அமைப்புகளிடம் எடுத்துச் சென்று,அவற்றை செய்ய நிர்பந்தப்படுத்திய உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.கூட்டமைப்பு நிர்வாகிகள் வேலுச்சாமி, சர்வேஸ்வரன், சிவசண்முகம், குணசேகரன் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x