Published : 07 Jan 2024 04:10 AM
Last Updated : 07 Jan 2024 04:10 AM

குடியரசு தின விழாவில் பங்கேற்க வால்பாறையை சேர்ந்த பழங்குடியின தம்பதி தேர்வு

வால்பாறையை அடுத்த கல்லார்குடி தெப்பக்குளம் மேடு பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த காடர் இன தம்பதி ராஜலட்சுமி, ஜெயபால். படம்: எஸ்.கோபு

வால்பாறை: குடியரசு தின விழாவில் பங்கேற்க வால்பாறையை சேர்ந்த பழங்குடியின தம்பதி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த கல்லார்குடி பகுதியைச் சேர்ந்த தம்பதி ஜெயபால், ராஜலட்சுமி. ஆனைமலை மலைத்தொடரில் வாழும் பழங்குடியினருக்காக தெப்பக்குளம் மேடு பகுதி நில உரிமை மீட்பு போராட்டத்தை அறவழியில் நடத்தி, நில உரிமை பெற்று தந்தவர் ராஜலட்சுமி. இதன் மூலமாக, தனது கிராமத்தை நாட்டின் சிறந்த முன் மாதிரி கிராமமாக மாற்றியுள்ளார். இவரது செயலுக்கு பக்க பலமாக இருந்து செயலாற்றியவர் கணவர் ஜெயபால்.

இவர்களின் செயலை பாராட்டும் விதமாக, இந்த ஆண்டு டெல்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ( விவிஐபி ) இருவரும் கலந்து கொள்ள தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, மத்திய அரசின் பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதன்பின், குடியரசு தலைவர் வழங்கும் விருந்திலும் பங்கேற்கின்றனர்.

இது குறித்து பழங்குடியின தம்பதி ராஜ லட்சுமி, ஜெய பால் கூறியதாவது: ஆனைமலை குன்று மலைத்தொடரில் கல்லார்குடி பகுதியில், பல தலை முறைகளாக காடர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிலச்சரிவில், கல்லார்குடி கிராமம் சிதிலமடைந்தது. இதையடுத்து, அருகில் உள்ள தெப்பக்குளம் மேடு பகுதியில் குடியேறினோம். அங்கு எங்களுக்கு குடியேற அனுமதி மறுக்கப் பட்டதால் நடை பயணம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை அறவழியில் நடத்தினோம்.

இதன் எதிரொலியாக எங்களுக்கு தெப்பக்குளம் மேடு பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்டு, அதற்கான உரிமையும் வழங்கப்பட்டது. அறவழியில் நடைபெற்ற போராட்டம் முழு வெற்றி பெற்றது. இந்நிலையில், டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க வரும் 22-ம் தேதி செல்கிறோம். பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்கள், முக்கியத்துவம் வாய்ந்த குடியரசு தின விழாவில் கலந்துகொள்வது மகிழ்ச்சியளிக்கிறது. பழங்குடியினத்தை சேர்ந்த எங்களை தேர்வு செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x