Published : 07 Jan 2024 04:12 AM
Last Updated : 07 Jan 2024 04:12 AM
ஈரோடு: மது விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கம் அரசுக்கு இல்லை. மது அருந்துபவர்கள் அதிலிருந்து விடுபடுவதற்கு போதுமான ஆலோசனைகள் வழங்கப் படுகிறது என ஈரோட்டில் வீட்டு வசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களுடன் முதல்வர் திட்டம் அரசியல் நோக்கமோ அல்லது விளம்பரம் நோக்கத்திற்காகவோ செய்யவில்லை. மக்கள் தங்கள் கோரிக்கை மனு மீதான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற வகையில் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. பொது இடங்களில் மது அருந்தும் சம்பவம் குறித்து காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சில இடங்களில் மது அருந்துவதால் நிகழும் குற்றச் சம்பவங்கள் குறித்து அரசு மீது சொல்லும் குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல. தனிப் பட்ட முறையில் நிகழும் குற்றச் சம்பவத்தில் போலீஸார் விசாரணையில் தான் தெரிய வரும்.
மது அருந்த வருபவர்களை எப்படியாவது குடிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசு இலக்கு நிர்ணயம் செய்யவில்லை. தவறான வழியில் சென்று தவறு நிகழக் கூடாது என்பதை சரி பார்ப்பதற்கான முயற்சியாக தான் இலக்கு நிர்ணயம் செய்யப்படுகிறது. மது விற்பனையை அதிகப் படுத்தும் நோக்கம் இல்லை. மது அருந்துபவர்கள், அந்த பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்ற நோக்கில் அரசின் சார்பில் போதுமான ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. கள் விற்பனையை மிகப்பெரிய ஆய்வு செய்து மேற்கொள்ள வேண்டிய பணிகளாகும்.
ஒரே நாளில் கள் குறித்து நடவடிக்கை எடுக்க முடியாது. அரசு மதுக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து தெளிவான புகார் வந்தால் பணியாளர்கள் கைது மற்றும் பணியிடை நீக்கம் போன்ற நடவடிக்கைகள் எடுக்க அரசு தயாராக உள்ளது. 25 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ள நிலையில் சிலர் செய்யும் தவறை மொத்தமாக சொல்லும் போது மற்றவர்களும் வேதனை அடைவார்கள். கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்வது 99 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது, என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT