Published : 06 Jan 2024 11:18 PM
Last Updated : 06 Jan 2024 11:18 PM

சென்னையில் ரூ.540 கோடியில் நவீன திரைப்பட நகரம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு @ ‘கலைஞர் 100’ விழா

சென்னை: சென்னை பூந்தமல்லியில் ரூ.540 கோடி மதிப்பில் நவீன திரைப்பட நகரம் அமைய உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘கலைஞர் 100’ விழாவில் அறிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா ‘கலைஞர் 100’ என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள், ரஜினி, கமல், வடிவேலு உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டுள்ளனர்.

இதில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “பல்வேறு அமைப்புகள் இந்த கலைஞர் நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில், கலைஞரின் மகன் என்ற முறையில் உங்களுக்கு நன்றி கூறிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். பெற்றோர் வைத்த பெயரை கூட கூப்பிடாமல் ‘கலைஞர்’ என்று தொண்டர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் கருணாநிதி. அவர் மறைந்த போது தமிழ்நாடே கலங்கி நின்றது.

இந்த அரசு திரைத் துறையினருக்கு பல்வேறு திட்டங்களை தீட்டிக் கொண்டு இருக்கிறது. அமைச்சர் உதயநிதி சினிமா துறையில் கால் பதித்தவர். பூந்தமல்லியில் ரூ.540 கோடி மதிப்பில் நவீன திரைப்பட நகரம் அமைய உள்ளது. ரூ.25 கோடி மதிப்பில் எம்ஜிஆர் திரைப்பட நகரம் மேம்ப்படுத்தப்படும்” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

இந்த விழா குறித்து தனது எக்ஸ் பதிவில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: “அரசியலில் அவர் தொடாத உயரங்கள் இல்லை. பிரதமர்களை, குடியரசுத் தலைவர்களைத் தீர்மானிக்கும் உயரத்தை அடைந்தவர் அவர். எனினும் அவரது இயற்பெயரையும் மீறிய முதற்பெயராக இன்றளவும் நிலைத்து நிற்பது #கலைஞர் எனும் அடைமொழிதான். 'தலைவர்' என்பதையும் தாண்டிய அடையாளமாக அவர் கருதியதும் 'கலைஞர்' என்பதைத்தான். கலையுலகுக்கும் முத்தமிழறிஞர் கலைஞருக்கும் இருந்த உறவுக்கு அப்பெயரே சிறந்த சான்று.

"Art should comfort the disturbed and disturb the comfortable" என்ற வரிக்கேற்பத் தம் படைப்புகளில் எல்லாம் அரசியலை நுழைத்து, சமூக இழிவுகளைச் சாடிய அசலான கலைஞருக்கு அவரது தாய்வீடாம் தென்னகத் திரையுலகத்தின் சொந்தங்கள் எல்லாம் கூடி எடுத்த #கலைஞர்100 மாபெரும் கலைவிழா கண்டு - அக்காவியத் தலைவனின் கொள்கை வாரிசாக, அவர் பண்படுத்திய தமிழ் மண்ணின் முதலமைச்சராக அகமகிழ்கிறேன். அவரது மகனாக நன்றி நவில்கிறேன்.

65 ஆண்டு காலம் அவர் பயணித்த துறையில் இருந்து திரண்டு வந்து அவர் நினைவைப் போற்றிய திரையுலக உடன்பிறப்புகள் அனைவருக்கும் தமிழ்நாட்டு மக்களின் சார்பாக நன்றி! நன்றி! கலைக்கும் கலைஞருக்கும் மரணமில்லை!” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x