

பந்தலூர்: அச்சுறுத்தி வரும் சிறுத்தையை பிடிக்க வலியுறுத்தி, பந்தலூர் பகுதியில் பொதுமக்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடந்த மாதம் முதல் சிறுத்தை ஒன்று சுற்றிக் திரிகிறது. கடந்த மாதத்தில் தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த 3 பெண்களை தாக்கியது.
படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 3 பேரில், பெண் ஒருவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து, சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, வனத்துறையினர் 5 இடங்களில் கூண்டு வைத்தும், பல இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தியும் சிறுத்தையை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், கொளப்பள்ளி பகுதியை அடுத்த சேவியர்மட்டம் பகுதியில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை தாக்கி தப்பிச் சென்றது. பந்தலூர் அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை பிடிக்க வலியுறுத்தி, பந்தலூரில் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்துக்கு ஆதரவாக பந்தலூர் சுற்றுவட்டார பகுதியிலுள்ள வியாபாரிகள், தங்கள் கடைகளை அடைத்தனர்.
இதுதொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, ‘‘கூடலூர் வனச்சரகம் கொளப்பள்ளி கிராமத்தில், இதுவரை 4 பேரை தாக்கி காயம் ஏற்படுத்திய சிறுத்தையை பிடிக்க வலியுறுத்தி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக கண்காணிப்பு குழுவினர், 25 வேட்டைத்தடுப்பு காவர்கள் 5 கூண்டுகள் மூலமாக, சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, தலைமை வன விலங்கு காப்பாளரிடம் உத்தரவு பெற்று மயக்க மருந்து செலுத்தி சிறுத்தையை பிடித்து, வேறு வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.