

சென்னை: இந்தியன் ஆயில் நிறுவனம் சமூகமேம்பாடு மேலாண்மை திட்டத்தின் கீழ், ரூ.28 கோடி மதிப்பிலான காசநோய் கண்டறியும் கருவிகளை வழங்குவதற்காக தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனம் சமூக மேம்பாடு மேலாண்மை திட்டத்தின் மூலம், பிரதமரின் முயற்சியால் உருவான டிபி முக்த் பாரத் அபியான் திட்டத்தை ஆதரிக்கும் வகையில், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் காசநோய் கண்டறியும் இயந்திரங்களை வழங்குவதன் மூலம், காசநோய்க்கு எதிரான போரை முன்னெடுத்து வருகிறது.
இந்த முயற்சியின் தொடர்ச்சியாக, இந்தியன் ஆயில் நிறுவனம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆரம்பச்சுகாதார நிலையங்களின் பயன்பாட்டுக்காக ரூ.28 கோடி செலவில் 192 காசநோய் கண்டறியும் இயந்திரங்களை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசுடன் செய்துள்ளது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குநர் வி.சி.அசோகன், தமிழக சுகாதாரத் துறைஅமைச்சர் மா.சுப்பிரமணியம், சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு மாநில மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் கூடுதல் இயக்குநர் ஆஷா ஃபிரெட்ரிக் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ``இந்தியன் ஆயில் நிறுவனம் தனது பல்வேறு சமூகமேம்பாடு மேலாண்மை திட்டத்தின் முயற்சிகள் மூலம், தமிழகத்தில் சிறந்த சுகாதார வசதிகளை வழங்க உதவி வருகிறது.
மேலும், வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளின் ஜெனரேட்டர்களுக்கான எரிபொருளை ஐஓசி தடையின்றி விநியோகம் செய்தது ஒரு முக்கியமான உயிர் காக்கும் செயலாகும்'' என்று பாராட்டினார். இந்நிகழ்ச்சியில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு மாநில அலுவலகத்தின் இயக்குநர் தனபாண்டியன் பங்கேற்றார்.