

சென்னை: அண்ணா பல்கலைக்கழக எம்ஐடிகல்லூரியின் கோபுர கண்காணிப்பு ட்ரோனுக்கு மத்திய அரசு காப்புரிமை வழங்கி சிறப்பித் துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சென்னை தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (எம்ஐடி)குரோம்பேட்டையில் அமைந்துள் ளது. இங்குதான் அரசின் வான்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும்டாக்டர் கலாம் யுஏவி ஆராய்ச்சிமையம் செயல்பட்டு வருகின்றன.
இதன் வாயிலாக வேளாண்மை மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கான பல்வேறு விதமான ட்ரோன்கள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த பணிகளில் பேராசிரியர் செந்தில் குமார் தலைமையிலான குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் எம்ஐடியின் யுஏவி ஆராய்ச்சி மையம் வடிவமைத்த ‘நீண்ட நேர கண்காணிப்பு ட்ரோன்’ வடிவமைப்புக்கான காப்புரிமையை அந்தக் குழுவுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.
இதுவரை ட்ரோன் வடிவமைப்பில் 4காப்புரிமைகளை இந்தக் குழு பெற்றுள்ளது. இதன்மூலம் ட்ரோன் கண்டுபிடிப்பில் தேசிய அளவில் அதிக காப்புரிமை பெற்ற மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது.
இதுகுறித்து அக்குழுவின் தலைவரான பேராசிரியர் செந்தில்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தமிழகத்தை ட்ரோன்களின் மையமாக மாற்றும் நோக்கத்துடன் எம்ஐடி கடந்த 20 ஆண்டுகளாகத் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.
இதுவரை நிலையாகப் பறக்கும் ட்ரோன், செங்குத்தாக பறக்கும் ட்ரோன், கண்காணிப்பு மற்றும் பொருட்களை தூக்கிச் செல்லும் ட்ரோன் ஆகியவற்றைக் கண்டுபிடித்து அதற்கான காப்புரிமையை மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளோம்.
தற்போது 12 மணி நேரம் வரை தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டகோபுர கண்காணிப்பு ட்ரோன்வடிவமைப்புக்கான காப்புரிமை யும் கிடைத்துள்ளது. எங்கள் ட்ரோன்கள் பேரிடர் காலங்கள் மற்றும் எல்லை கண்காணிப்பு பணிகளில் அதிகளவில் பயன் படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு தமிழக அரசும் தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தந்து வரு கிறது’’ என்று தெரிவித்தார்.