Published : 06 Jan 2024 06:19 AM
Last Updated : 06 Jan 2024 06:19 AM
சென்னை: விஜயகாந்த் மறைவையொட்டி நினைவேந்தல் கட்டுரை எழுதியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நன்றி தெரிவித்துள் ளார். இது தொடர்பாக பிரதமருக்கு பிரேமலதா அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழக மக்கள் மனதில் குறிப்பாக தேமுதிகவினர் மனதில் டிச.28-ம் தேதி என்பது கருப்பு தினமாக பதிந்துள்ளது. அன்றைய தினமே எங்களது அன்புக்குரிய தலைவர் தமிழக மக்களை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு மறைந்தார்.
இந்நிலையில் பல்வேறு நேர நெருக்கடிக்கு இடையிலும், தமிழக மக்களின் இதயங்களில் ஏற்பட்ட காயத்தை குணப்படுத்தும் வகையில் தாங்கள் எழுதிய நினைவேந்தல் கட்டுரையை கண்டு இன்பஅதிர்ச்சியடைந்தோம். இது மட்டுமின்றி அண்மையில் பாரதிதாசன் பல்கலை. மாணவர்களிடையே உரையாற்றும்போதும், விஜய காந்த்தான் உண்மையான கேப் டன் என நினைவுகூர்ந்தீர்கள்.
குறிப்பாக 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலையொட்டி சேலத்தில் தலைவர் விஜயகாந்தோடு நீங்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம், நாடாளுமன்றத்தில் என்டிஏ கூட்டணித் தலைவர்கள் மற்றும் விஜயகாந்தோடுடனான உரையாடல், அந்தத் தேர்தலில் 18.5 வாக்கு விகிதத்தை எட்டியது தொடர்பாக கட்டுரையில் நினைவூட்டியிருப்பது தலைவர் விஜயகாந்துடனான உங்களது நட்பை பிரதிபலிக்கிறது.
இதன்மூலம் அவருக்கு செய்த இதயப்பூர்வமான அஞ்சலிக்கு தேமுதிக நன்றி தெரிவிக்கிறது. அவரது பங்களிப்பு தொடர்பான கருத்துகளை பதிவு செய்து கவுரவிக்க வேண்டும் என்ற உங்களது முயற்சி, துயரில் உள்ள லட்சக்கணக்கான உள்ளங்கள் மீண்டு வரஉதவும்.
அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி, உங்களுக்கும் தலைவர் விஜயகாந்துக்கு இடையிலான நீண்ட கால நட்பு வரலாற்றில் பொறிக்கப்படும். அவரை கவுரவிக்கும் உங்களது வார்த்தைகளுக்கு குடும்பத்தினர் சார்பிலும் நன்றி தெரிவிக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT